மாநில செய்திகள்

சென்னையில் பட்டப்பகலில் சினிமா காட்சிபோலரவுடிகள் மோதல்; வெடிகுண்டு வீச்சுஅரிவாள் வெட்டில் தாய், மகன் படுகாயம் + "||" + in Chennai Like the cinema scene Gangsters Clash

சென்னையில் பட்டப்பகலில் சினிமா காட்சிபோலரவுடிகள் மோதல்; வெடிகுண்டு வீச்சுஅரிவாள் வெட்டில் தாய், மகன் படுகாயம்

சென்னையில் பட்டப்பகலில் சினிமா காட்சிபோலரவுடிகள் மோதல்; வெடிகுண்டு வீச்சுஅரிவாள் வெட்டில் தாய், மகன் படுகாயம்
சென்னையில் பட்டப்பகலில் ரவுடிகள் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். அப்போது அரிவாள் வெட்டும், வெடிகுண்டு வீச்சும் நடந்தது. அரிவாள் வெட்டில் தாய்-மகன் படுகாயம் அடைந்தனர்.
சென்னை,

சென்னைக்கு பிரதமர் நரேந்திர மோடி, சீன நாட்டின் அதிபர் ஜின்பிங் ஆகிய இருபெரும் தலைவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வருகின்றனர். இதையொட்டி சென்னை போலீஸ் பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கிண்டி, விமான நிலையம், பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் தீவிர ரோந்து, பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்திகை என போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டிருந்தனர்.

இத்தனை பரபரப்புக்கு மத்தியில் சென்னையில் ரவுடிகள் மோதலில் குண்டுவீச்சு, அரிவாள் வெட்டு என பட்டப்பகலில் சினிமா காட்சி போல அரங்கேறி மக்களை பதைபதைப்புக்கு ஆளாக்கினர். இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

ரவுடிகள் மோதல்

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் சிவகுமார். அண்ணாசாலை பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தோட்டம் சேகர்.

இவர்கள் இருவரும் பிரபல ரவுடிகளாகவும், பரம எதிரிகளாகவும் விளங்கினர். தோட்டம் சேகர், அ.தி.மு.க.விலும் இணைந்து செயல்பட்டார்.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோட்டம் சேகரை, சிவகுமார் வெட்டிக் கொலை செய்தார். இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் தோட்டம் சேகரின் கூட்டாளிகள், சிவகுமாரின் தம்பியை வெட்டிக் கொன்றனர். தொடர்ந்து இரு தரப்பிலும் மோதல்கள் நடந்து வந்தன.

சேகரின் மனைவியும், மகனும்

இத்தகைய சூழலில், தோட்டம் சேகரின் மனைவியும், சட்ட மாணவியுமான மலர்க்கொடி, தனது மகன் அழகர்ராஜாவுடன் சென்னை எழும்பூர் கோர்ட்டில் நேற்று வழக்கு ஒன்றுக்காக ஆஜரானார்.

வழக்கு விசாரணை முடிந்தபிறகு மலர்க்கொடி, மகன் அழகர்ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அவர்களுக்கு பாதுகாப்பாக அவர்களது ஆட்கள் 4 பேர் ஆட்டோவில் முன்னே சென்றுகொண்டிருந்தனர்.

அரிவாள் வெட்டு

அப்போது காசினோ தியேட்டர் முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிக்னலுக்காக மலர்க்கொடியும், அழகர்ராஜாவும் காத்திருந்தனர். அந்த நேரத்தில், சினிமாவில் வருவதுபோல அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல் மலர்க்கொடியையும், அழகர்ராஜாவையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள்.

மலர்க்கொடியின் முதுகிலும், கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. அழகர்ராஜாவுக்கும் கைகளில் வெட்டு விழுந்தது.

வெடிகுண்டு வீச்சு

இதைப்பார்த்த பொதுமக்கள் அலறியடித்து நாலா புறமும் ஓட்டம் எடுத்தனர். அந்தப் பகுதியில் பதற்றம் தொற்றியது.

இதற்கிடையே, மலர்க்கொடிக்கும், அவரது மகன் அழகர்ராஜாவுக்கும் பாதுகாப்பாக ஆட்டோவில் வந்தவர்கள், திடீரென்று 2 வெடிகுண்டுகளை வீசினார்கள். அதில் ஒரு குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. அந்த பகுதியே போர்க்களம் போல மாறியது. குண்டு வெடித்ததைத் தொடர்ந்து, அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை அங்கேயே அப்படி அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.

போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

இந்த களேபரத்தில் மலர்க்கொடி மற்றும் அவரது மகன் அழகர்ராஜாவை அரிவாளால் வெட்டி தாக்குதலில் ஈடுபட்ட ரவுடிகளும் தப்பி ஓடினர். இதனால் மலர்க்கொடியும், அழகர்ராஜாவும் வெட்டு காயங்களுடன் உயிர் தப்பினர்.

அழகர்ராஜா உயிர் பிழைப்பதற்காக திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். மலர்க்கொடி ரத்தம் சொட்ட சொட்ட சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று தஞ்சம் அடைந்தார். அழகர்ராஜா கைகளில் ஏற்பட்ட காயத்துக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மலர்க்கொடியை, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர்.

உதவி கமிஷனர் விரைந்தார்

ரவுடிகள் மோதலில் அரிவாள் வெட்டு, வெடிகுண்டு வீச்சு நடந்தது குறித்து தகவல் அறிந்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் எழும்பூர் உதவி கமிஷனர் சுப்பிரமணி, சிந்தாதிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் உள்ளிட்ட போலீஸ் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வெடிகுண்டு செயலிழப்பு வல்லுனர்களும் விரைந்தனர். வெடிக்காத வெடிகுண்டை அவர்கள் கைப்பற்றினர்.

தடயவியல் நிபுணர் ஷில்பா, வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

2 வழக்குகள்

இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வெடிகுண்டு சட்டப்பிரிவின்கீழ் மலர்க்கொடி, அழகர்ராஜா மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த மணிகண்டன், விஜயகுமார் ஆகிய 4 பேர் மீது ஒரு வழக்குப்பதிவு செய்தனர். மலர்க்கொடி மற்றும் அழகர்ராஜாவை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றதாக மயிலாப்பூரை சேர்ந்த அரவிந்தன், அப்புனி என்ற அப்பு உள்பட 6 பேர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற அரவிந்தன் மற்றும் அப்புவை அண்ணாசாலை போலீசார் சம்பவம் நடந்த அடுத்த அரை மணி நேரத்தில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

வெடிகுண்டு சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட மலர்க்கொடி, அழகர்ராஜா மற்றும் அவரது கூட்டத்தின் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை