சீன அதிபர் சற்று நேரத்தில் வருகிறார் வரவேற்க சென்னை விமான நிலையத்தில் இருந்து வழிநெடுக சிறப்பு ஏற்பாடு


சீன அதிபர் சற்று நேரத்தில் வருகிறார் வரவேற்க சென்னை விமான நிலையத்தில் இருந்து வழிநெடுக சிறப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 11 Oct 2019 6:39 AM GMT (Updated: 11 Oct 2019 6:39 AM GMT)

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் இருந்து வழிநெடுக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை

பிரதமர் மோடியுடன் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள அதிகாரபூர்வமற்ற 2 நாட்கள் சந்திப்புக்காக பீஜிங் நகரில் இருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் தனி விமானத்தில் இன்று காலை  புறப்பட்டார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங், பிற்பகல்  சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். சென்னை வந்துசேரும் சீன அதிபரை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். சென்னை விமான நிலைய வளாகத்தில், சீன அதிபருக்கு, தமிழ்நாட்டின் பாரம்பரிய முறைபடி வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. 

சென்னை விமான நிலைய நுழைவு வாயிலில், வாழை மரங்கள், கரும்புகளால் ஆன பிரம்மாண்ட அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென்னங்கீற்றுகளால் ஆன நுழைவுவாயில் பழவகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் - கிண்டி இடையே உள்ள சாலையோர நடைபாதையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

சீன அதிபருக்கு, சென்னை விமான நிலையத்திற்கு வெளியே  500 பாரம்பரிய கலைஞர்களும்,  வழி நெடுகிலும்  3,500 கலைஞர்களையும் கொண்டு வரவேற்பு அளிக்க அரசு ஏற்பாடு செய்து உள்ளது.

சீன அதிபர் வருகையையொட்டி பகல் 1.30 மணி முதல் சென்னை விமானநிலையம் முதல், ஐடிசி வரை போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் சந்திப்பையொட்டி, மாமல்லபுரத்தின் நுழைவுவாயில் பகுதியிலும், கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும், வாழைமரங்கள், கரும்புகள், மலர்களால் பிரம்மாண்ட அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இருபெரும் தலைவர்களை வரவேற்க காய்கறிகளால் பிரம்மாண்ட அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்க, பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தயாராகி வரும் நிலையில், அதற்காக, மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வணிக பெருமக்களும், தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளனர். கடைகளை, வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து, மாமல்லபுரத்திற்கு வருகை தரும் இருபெரும் தலைவர்களை வரவேற்க வணிகர்களும், முழுவீச்சில் தயாராகியுள்ளனர். 

சீன அதிபர்-பிரதமர் மோடியை வரவேற்க மாமல்லபுரத்தில் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் ஐந்து ரதம் அருகே 18 வகையான காய்கறி, பழங்களுடன் அலங்கார வளைவு அமைக்கப்பட்டு உள்ளது.

Next Story