மாநில செய்திகள்

தேனி அரசு பள்ளியில் பரபரப்பு:வகுப்பறையில் பிளஸ்-2 மாணவன் கொலை + "||" + In the classroom Plus Two student killed

தேனி அரசு பள்ளியில் பரபரப்பு:வகுப்பறையில் பிளஸ்-2 மாணவன் கொலை

தேனி அரசு பள்ளியில் பரபரப்பு:வகுப்பறையில் பிளஸ்-2 மாணவன் கொலை
தேனியில் அரசு பள்ளியில் வகுப்பறையில் மாணவன் கொலை செய்யப்பட்டார்.
தேனி,

தேனி அல்லிநகரம் கம்பர் தெருவை சேர்ந்தவர் முருகன். கட்டிட தொழிலாளி. இவருடைய மகன் திருமால் (வயது 17). இவர், தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று பிற்பகல் இவர் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிடச் சென்றார். சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளிக்கு வந்து விட்டார். பள்ளி வளாகத்தில் நின்று கொண்டு இருந்தபோது, அவருடைய இடுப்பை சக மாணவர் ஒருவர் கிள்ளி விளையாடினார். பின்னர் திருமால் வகுப்பறைக்குள் சென்று விட்டார்.

விளையாட்டு சண்டையில் கொலை

அவரை பின்தொடர்ந்து அந்த மாணவரும் வகுப்பறைக்கு சென்றார். வகுப்பறைக்குள் மீண்டும் அந்த மாணவர், திருமாலின் இடுப்பை கிள்ளி விளையாட்டாக சண்டையிட்டதாக தெரிகிறது. அப்போது திருமாலை அந்த மாணவர் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில், அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து வகுப்பறையில் இருந்த சக மாணவர்கள் கூச்சல் போட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் அங்கு வந்து பார்த்தனர். மாணவர் மயங்கிக் கிடப்பது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. அதில் மாணவர் திருமாலை ஏற்றி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கைது

இதைத்தொடர்ந்து மாணவர் சாவுக்கு காரணமான 17 வயதுடைய பிளஸ்-2 மாணவரை போலீசார் கைது செய்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இறந்த மாணவரும், அவருடைய சாவுக்கு காரணமான மாணவரும் ஒரே வகுப்பறையில் படிப்பவர்கள். இருவரும் 8-ம் வகுப்பில் இருந்தே நண்பர்களாக ஒன்றாக படித்து வருகிறார்கள். இடுப்பை கிள்ளி விளையாடிய நிலையில், விளையாட்டாய் தொடங்கிய சண்டை எதிர்பாராத விதமாக கொலையாகி விட்டது’ என்றார்.