சீன அதிபருக்கு சுற்றுலா வழிகாட்டியாக மாறிய பிரதமர் நரேந்திரமோடி மாமல்லபுரத்தில் ருசிகரம்


சீன அதிபருக்கு சுற்றுலா வழிகாட்டியாக மாறிய பிரதமர் நரேந்திரமோடி மாமல்லபுரத்தில் ருசிகரம்
x
தினத்தந்தி 11 Oct 2019 11:56 PM GMT (Updated: 11 Oct 2019 11:56 PM GMT)

பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங்கிடம் மாமல்லபுர சிற்பங்களின் சிறப்புகளை விவரித்தார்.

சென்னை,

பிரதமர் மோடியுடனான சந்திப்புக்காக சென்னை ஓட்டலில் இருந்து மாமல்லபுரத்துக்கு வந்த சீன அதிபரை, அங்குள்ள அர்ஜூனன் தபசு அருகே பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். அப்போது மிகவும் இயல்பாக காணப்பட்ட இரு தலைவர்களும் நண்பர்களைப்போல மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

பின்னர் இருவரும் பேசிக்கொண்டே அங்குள்ள பல்லவர் கால சிற்பங்களை நடந்து சென்று பார்வையிட்டனர். கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை கல் என தமிழர்களின் கட்டிடக்கலையை பறைசாற்றும் சின்னங்களை இரு தலைவர்களும் பார்த்து ரசித்தனர்.

யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னம் என அறிவிக்கப்பட்டு உள்ள 7-ம் நூற்றாண்டின் பல்லவர் கால சிற்பங்களின் சிறப்புகளை அப்போது பிரதமர் மோடி, ஜின்பிங்குக்கு எடுத்துரைத்தார். சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டிகள் விவரமாக எடுத்துரைப்பது போல, மோடியும் ஜின்பிங்கிடம் அனைத்து சிறப்புகளையும் விவரித்தார். இடையில் இருவரும் அமர்ந்திருந்து இளநீரும் அருந்தினர்.

பொதுவாக ஒரு நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் பிற நாட்டு தலைவர்களுக்கு அந்த நாட்டின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் அந்தந்த நாடுகளின் தலைவர்களுக்கு கிடைப்பதில்லை. ஆனால் நேற்று மாமல்லபுரம் வந்த சீன அதிபருக்கு, சுற்றுலா வழிகாட்டியாக மாறி மாமல்லபுரத்தின் சிறப்புகளை விளக்கும் வாய்ப்பு பிரதமர் மோடிக்கு கிடைத்தது. அவரும் அதை சிறப்பாக செய்தார்.

மொத்தத்தில் இரு நாடுகளின் தலைவர்களின் சந்திப்பாக இல்லாமல், நீண்ட கால நண்பர்களுக்கு இடையேயான சந்திப்பை போலவே இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி நடத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Next Story