வங்கிகளில் மூத்த குடிமக்கள் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


வங்கிகளில் மூத்த குடிமக்கள் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Oct 2019 7:32 PM GMT (Updated: 12 Oct 2019 7:32 PM GMT)

வங்கிகளில் மூத்த குடிமக்கள் செய்துள்ள டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வட்டி குறைப்பு

தொழில்துறை வளர்ச்சி, வீட்டுவசதித்துறை வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்குடன் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன் மீதான வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து குறைத்து வருவது அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரத்தில் நாட்டு நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மூத்த குடிமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது.

மூத்த குடிமக்கள் முதலீடு செய்துள்ள வைப்புத்தொகை மீதான அதிகபட்ச வட்டி விகிதம் கடந்த ஓராண்டில் 8.25 சதவீதத்தில் இருந்து 6.90 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கான வட்டி விகிதம் 7.75 சதவீதத்தில் இருந்து 6.40 சதவீதம் ஆக குறைந்திருக்கிறது. சாதாரண மக்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டதை விட மூத்த குடிமக்களுக்கான வட்டி விகித குறைப்பு தான் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த குடிமக்கள் திணறல்

வங்கிகளில் செய்யப்படும் பொதுவான டெபாசிட்டுகளில் (வைப்பீடு) இருந்து மூத்த குடிமக்கள் செய்யும் டெபாசிட்டுகளை வேறுபடுத்திப் பார்க்கவேண்டும். வங்கிகளில் சேமிப்புக்காக செய்யப்படும் டெபாசிட்டுகளில் இருந்து மூத்த குடிமக்கள் செய்யும் டெபாசிட்டுகள் முற்றிலுமாக மாறுபட்டவையாகும். வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள மூத்த குடிமக்களில் பெரும்பாலானோர் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணி ஓய்வுபெற்ற பின்னர் கிடைத்த ஓய்வூதிய பயன்களை வங்கிகளில் டெபாசிட் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டியை வாழ்வாதாரமாக கொண்டவர்கள். வங்கிகளில் டொபாசிட்டுகள் மீது வழங்கப்படும் வட்டி குறைக்கப்பட்டதால் இவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களில் பெரும்பான்மையினர் முதுமை சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதால் அவர்களின் மாத செலவில் மருத்துவச்செலவு கணிசமானதாக இருக்கும். அதனால் ஆண்டுக்கு ஆண்டு அவர்களின் செலவு அதிகரிக்கக்கூடிய நிலையில் வட்டி குறைப்பால் வருமானம் குறைவதால் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு மூத்த குடிமக்கள் செய்துள்ள டெபாசிட்டுகள் மீதான வட்டியை மட்டும் குறைந்தது ஒரு சதவீதம் அதிகரித்து வழங்கவேண்டும். மூத்த குடிமக்களின் டெபாசிட்டுக்கு கிடைக்கும் வருவாய்க்கு வருமானவரி விலக்கும் வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story