இயற்கைக்கும், மனிதனுக்கும் எதிராக உள்ள ஆராய்ச்சிகள் சமுதாயத்தை அழித்துவிடும் ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு


இயற்கைக்கும், மனிதனுக்கும் எதிராக உள்ள ஆராய்ச்சிகள் சமுதாயத்தை அழித்துவிடும் ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 12 Oct 2019 9:00 PM GMT (Updated: 12 Oct 2019 7:37 PM GMT)

இயற்கைக்கும், மனிதனுக்கும் எதிராக உள்ள ஆராய்ச்சிகள் மிகப்பெரிய தீங்கை ஏற்படுத்திவிடும். சமுதாயத்தை அழித்துவிடும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் கூறினார்.

சென்னை,

பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு அருணை சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு விருதுகளை வழங்கியது. சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார்.

பின்னர் நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் பேசியதாவது:-

இது ஆராய்ச்சியாளர்கள் கூடியிருக்கும் கூட்டம். அதனால், ஆராய்ச்சி தொடர்பாக என் மனதில் உள்ளதை பேச விரும்புகிறேன். தற்போதைய சமூகம் பல பிரச்சினைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றன.

1970-களில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்றால், அங்குள்ள சுவற்றில் தாய், தந்தை, 4 குழந்தைகள், இதுதான் ஒரு குடும்பம் என்று குடும்ப கட்டுப்பாட்டு விளம்பரம் செய்திருந்தனர். இதையடுத்து ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று 2 குழந்தைகள் போதும் என்ற அரசு, பின்னர் ஒரு குழந்தை போதும் என்று குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தியது.

செயற்கை கருத்தரிப்பு

இப்போது நிலை என்ன? 2018-ம் ஆண்டு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டத்தை தவிர, பிற மாவட்ட தலைநகரங்களில் குறைந்தது 3 செயற்கை கருத்தரிப்பு மையங்கள் உள்ளன. புகழ்பெற்ற தாலுகாவில் 5-க்கும் மேற்பட்ட கருத்தரிப்பு மையங்கள் உள்ளன. சில மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட கருத்தரிப்பு மையங்கள் உள்ளன” என்று கூறியுள்ளது. இப்படி ஒரு நிலை ஏற்பட என்ன காரணம்? எங்கு தப்பு நடந்தது? இதற்கு என்ன தீர்ப்பு?

அதேபோல, 1975 முதல் 1981-ம் ஆண்டு வரை தென்னிந்தியாவில் விஷகாய்ச்சல் நடமாடியது. இந்த காய்ச்சலுக்கு காரணம் கொசுக்கள். இந்த கொசுக்கள் பப்பாளி மரத்தில்தான் உருவாகிறது என்று கூறி பப்பாளி மரங்களை எல்லாம் அரசு வெட்டிச்சாய்த்தது.

என்ன காரணம்?

2013-ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் பலரை தாங்கியபோது, இதற்கு தீர்வுகாண பப்பாளி இலைதான் மருந்து என்று அரசே அறிவித்தது. இதன்பின்னர் அதிக அளவில் பப்பாளி மரங்கள் நட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேபோலத்தான் விறகுக்காக சீமைகருவேலம் மர விதைகளை பல மாவட்டங்களில் தமிழக அரசு விதைத்தது. தற்போது, இந்த மரத்தினால்தான் நிலத்துக்கும், நிலத்தடி நீருக்கும் பாதிப்பு என்று ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். இந்த மரங்களை வெட்ட வேண்டும் என்கின்றனர். எனவே, 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மரம் வேண்டும் என்றும், ஒரு மரம் வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. தற்போது வேண்டாம் என்ற மரத்தை மீண்டும் நடுகிறோம். வேண்டும் என்ற மரத்தை வெட்டவேண்டும் என்கிறோம். இதற்கு என்ன காரணம்?.

பிளாஸ்டிக் தடை

ஓட்டல்களில் இருந்து சாப்பிட்ட பின் தூக்கி வீசப்படும் வாழை இலைகள் கொண்ட திடக்கழிவுகளை அழிப்பதற்காக பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள் உள்ளிட்டவை வந்தன. இதனால் மக்களுக்கு புற்றுநோய் வந்தது. இயற்கை நிலம் பாதிப்பு ஏற்பட்டு சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இப்போது அந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.

பொதுவாக இதுபோன்ற சமூக பாதிப்புகள் எல்லாம் விஞ்ஞானிகள் மீதும், அவர்கள் தரும் அறிக்கையின் மீதும் தான் சுமத்தப்படும். விஞ்ஞானிகளிடம் கேட்டால், எங்களது ஆய்வு அறிக்கை சரியானது தான். ஆனால், அரசின் கொள்கை முடிவுதான் தவறு என்கின்றனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் கேட்டால், கொள்கை முடிவு சரிதான், சட்டத்தை அமல்படுத்தும் அமைப்பில்தான் பிரச்சினை உள்ளது என்கின்றனர். சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளிடம் கேட்டால், வணிகர்கள் மீதும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதும் பழி சுமத்துகின்றனர்.

சமுதாயத்தை அழித்துவிடும்

எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண ஆராய்ச்சியாளர்கள் முன்வர வேண்டும். அதாவது, ஆராய்ச்சி என்பது இயற்கையையும், மனிதனையும் சேர்த்து வைக்கும் விதமாக இருந்தால், அது சமுதாயத்துக்கு நன்மையை ஏற்படுத்தும். பயன் உள்ளதாக இருக்கும். ஆனால், இயற்கைக்கும், மனிதனுக்கும் எதிராக உள்ள ஆராய்ச்சிகள் மிகப்பெரிய தீங்கை ஏற்படுத்திவிடும். சமுதாயத்தை அழித்துவிடும். ஆராய்ச்சி மட்டுமே சமுதாயத்துக்கு முழுமையான பலன்களை அளிக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story