மாநில செய்திகள்

ஒரே வாரத்தில் மாமல்லபுரத்தை சிங்கப்பூர் போல மாற்றியுள்ளனர்8 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திற்காக எதையும் செய்யவில்லைமு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு + "||" + MK Stalin Accusation

ஒரே வாரத்தில் மாமல்லபுரத்தை சிங்கப்பூர் போல மாற்றியுள்ளனர்8 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திற்காக எதையும் செய்யவில்லைமு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஒரே வாரத்தில் மாமல்லபுரத்தை சிங்கப்பூர் போல மாற்றியுள்ளனர்8 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திற்காக எதையும் செய்யவில்லைமு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஒரே வாரத்தில் மாமல்லபுரத்தை சிங்கப்பூர் போல மாற்றியுள்ளனர். 8 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திற்காக எதையும் செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
விழுப்புரம்,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் தனது பிரசாரத்தை தொடங்கினார். காலை 9 மணிக்கு கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாம்பழப்பட்டு சாலை ஸ்டாலின் நகரில் திண்ணை பிரசாரம் மேற்கொண்டு அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஆரியூர், வெங்கந்தூர் ஆகிய கிராமங்களுக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று திண்ணை பிரசாரம் மேற்கொண்டு அங்குள்ள பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். வெங்கந்தூர் பகுதியில் நடந்தே சென்று அங்குள்ள பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

இந்த பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:-

அடுத்து தி.மு.க. தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று எங்களை விட மக்கள்தான் அதிக நம்பிக்கையுடன் உள்ளனர். அது நிச்சயம் நிறைவேறும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தந்த சாதனை வெற்றியை போன்று இந்த தேர்தலிலும் நீங்கள் உருவாக்கித்தர வேண்டும்.

சிறையில் இருப்பார்கள்

தற்போது இங்கு நடப்பது பா.ஜனதா ஆட்சி. மத்தியில் இருந்துகொண்டு ஆட்டிப்படைக் கிறார்கள். அடிமையாக நடத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சர்வாதிகார ஆட்சி நடத்தினாலும் கூட ஒருபோதும் அவர்கள் மத்திய அரசுக்கு அடிபணிந்ததில்லை. ஆனால் எடப்பாடி கையை கட்டிக்கொண்டு, வாயை பொத்திக்கொண்டு மத்தியில் என்னென்ன சொல்கிறார்களோ அதை அப்படியே செய்கிறார். ஏனென்றால் இவர்கள் கொள்ளையடிக்கிறார்கள்.

பா.ஜ.க.வுக்கு ஆதரவு தரவில்லையென்றால் எல்லோரும் சிறையில் இருப்பார்கள். அதற்கு பயந்து கொண்டுதான் அவர்களுக்கு அடிபணிந்து ஆட்சி நடத்தி கொண்டிருக்கின்றனர்.

சிங்கப்பூரை போன்று மாற்றினர்

சீன அதிபரும், பிரதமர் மோடியும் மாமல்லபுரத்திற்கு வந்ததையொட்டி அந்த ஊரை ஒரே வாரத்தில் சிங்கப்பூரை போன்று மாற்றியுள்ளனர். ஆனால் கடந்த 8 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திற்காக எதையும் செய்யவில்லை. குறிப்பாக கிராமங்களில் எந்தவொரு அடிப்படை பணிகளும் நடைபெறவில்லை. இதற்கு காரணம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததுதான்.

உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் ஆளும் கட்சியினர் தோல்வியடைந்து விடுவோம் என்று பயப்படுகிறார்கள். அதனால் தான் ஏதேதோ காரணம் சொல்லி நடத்தாமல் உள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிப்போம். அதன் பிறகு மக்கள் பிரச்சினைகள் அனைத்தும் சுலபமாக தீர்த்து வைக்கப்படும்.

மத்தியில் நாம் எதிர்பார்த்த ஆட்சி வரவில்லை. இதனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றித்தர முடியவில்லை. மாநிலத்தில் நாம்தான் ஆட்சிக்கு வருவோம். வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றி தருவோம். அதற்கு நல்ல வாய்ப்பாகவும், அ.தி.மு.க. அரசுக்கு சரியான பாடம் புகட்டுகிற வகையிலும் இந்த இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு சிறப்பான வெற்றியை தேடித்தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. மீது நம்பிக்கை

பொதுக்கூட்டம், வேன் பிரசாரம் இவையல்லாம் தேர்தலில் வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள்தான் என்றாலும், நான் மிகவும் விரும்புவது திண்ணை பிரசாரத்தைத்தான். காரணம், அது வெறும் பரப்புரையோ, சொற்பொழிவோ அல்ல. நம்மை நம்பி வாக்களிக்கும் பொதுமக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? என்பதை முகத்துக்கு முகம், இதயத்துக்கு இதயம் அறிந்துகொள்ளக்கூடிய நேரடியான நெருக்கமான உரையாடல்.

இந்த திண்ணை பிரசாரத்தின்போது மக்கள் காட்டிய பேராதரவு, திண்ணமான தெம்பையும், திடமான நம்பிக்கையையும் அளித்தது. தமிழ்நாட்டில் நடைபெறும் அவலகரமான, அடிமைத்தனமான ஆட்சிக்குப் பாடம் புகட்ட தங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருப்பதாக வாக்காளர்கள் நிச்சயமாக நம்புகிறார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாக வேண்டும் என்பதில் நம்மைவிட அவர்கள் ஆர்வமாகவும், முனைப்பாகவும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டை மீட்பதற்கு தி.மு.க. தான் ஒரே நம்பிக்கை என்பதையும் வெளிப்படுத்தினார்கள்.

கவனமான அறுவடை செய்யுங்கள்

மக்கள் நமக்கு தரத்தயாராக இருக்கின்ற வெற்றியைத் தட்டிப் பறித்திட ஆட்சியாளர்கள் தந்திர வழிகளை கையாள்வார்கள். அதிகார அடாவடி அத்துமீறல்களில் ஈடுபடுவார்கள். கொள்ளையடித்து குவித்து வைத்திருக்கும் பணத்தால் வெற்றியை விலைபேசி வாங்கிடலாம் என நினைப்பார்கள்.

அவர்களின் அத்தனை முறைகேடுகளையும் தில்லு முல்லுகளையும் எதிர்கொள்ள நம்மிடம் இருக்கும் ஆயுதம் உழைப்பு. அந்த உழைப்பை சிறிதும் சிதறவிடாமல் தேர்தல் களத்தில் காட்டுங்கள். நாங்குநேரி, விக்கிரவாண்டி இரண்டு தொகுதிகளிலும் விளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள். தேர்தல் வெற்றி செய்தியை கருணாநிதி நினைவிடத்தில் காணிக்கையாக்க பாடுபடுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.