மோடி-ஜின்பிங் பேச்சுவார்த்தை இந்திய-சீன உயர் அதிகாரிகள் பங்கேற்பு வர்த்தக பிரச்சினைகளுக்கு தீர்வு காண உயர்மட்ட குழு அமைக்க முடிவு


மோடி-ஜின்பிங் பேச்சுவார்த்தை இந்திய-சீன உயர் அதிகாரிகள் பங்கேற்பு வர்த்தக பிரச்சினைகளுக்கு தீர்வு காண உயர்மட்ட குழு அமைக்க முடிவு
x
தினத்தந்தி 13 Oct 2019 12:15 AM GMT (Updated: 12 Oct 2019 9:39 PM GMT)

சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பிரச்சினைகளுக்கு தீர்வு காண உயர்மட்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

சென்னை,

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, 2 நாள் பயணமாக சீன அதிபர் ஜின்பிங் நேற்று முன்தினம் சென்னை வந்தார்.

முறைசாரா உச்சி மாநாடு

சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கிய அவர், பின்னர் காரில் மாமல்லபுரம் சென்று பிரதமர் மோடியுடன் சேர்ந்து அங்குள்ள பல்லவர் கால சிற்பங்களையும், கடற்கரை கோவிலையும் பார்த்து ரசித்தார். அதன்பிறகு இரு தலைவர்களும் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். மோடி அளித்த இரவு விருந்தில் பங்கேற்ற ஜின்பிங், பின்னர் மாமல்லபுரத்தில் இருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு திரும்பினார்.

2-வது நாளான நேற்று மோடி தங்கி இருந்த மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் நட்சத்திர ஓட்டலில் இரு தலைவர்களும் சந்தித்து பேசும் முறைசாரா உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஜின்பிங்கை வரவேற்ற மோடி

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜின்பிங் நேற்று காலை 9.40 மணி அளவில், கிண்டியில் தான் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டார்.

சர்தார் பட்டேல் சாலை, மத்திய கைலாஷ், பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லூர், அக்கரை வழியாக சென்ற அவருக்கு பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் சீன நாட்டு கொடியை அசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ஆங்காங்கே மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடனும் வரவேற்பு அளிக்கப் பட்டது. காலை 10.10 மணிக்கு, மோடி தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலை ஜின்பிங் சென்று அடைந்தார். காரில் இருந்து இறங்கிய அவரை மோடி கைகுலுக்கி வரவேற்றார்.

ஒரு மணி நேரம் பேச்சு

பின்னர் அவர்கள் இருவரும், அங்கு தயாராக நிறுத்தப்பட்டு இருந்த பேட்டரி காரில் ஏறினார்கள். பேட்டரி கார் மெதுவாக ஓட்டலின் பின்புறம் உள்ள கடற்கரையையொட்டிய பகுதிக்கு சென்றது.

அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த குண்டு துளைக்காத கண்ணாடி அரங்கில் மோடியும் ஜின்பிங்கும் அமர்ந்து கடலின் அழகை ரசித்தபடி, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுடன் மொழி பெயர்ப்பாளர்கள் மட்டுமே இருந்தனர்.

இரு தலைவர்களும் தனியாக பேசிய பிறகு, ஓட்டலின் மற்றொரு அறையில் முறைசாரா உச்சி மாநாடு தொடங்கியது. இதில் மோடி, ஜின்பிங்குடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சீன தரப்பில் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



சீனா-தமிழகம் இடையே வணிக உறவு

மாநாடு தொடங்கியதும் சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்று பிரதமர் மோடி பேசினார். முதலில், “மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன்” என்று தமிழில் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழில் நான் பேசுகிறேன். இந்தியாவும், சீனாவும் பொருளாதார சக்திகளாக இருக்கின்றன. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவுக்கும், தமிழகத்துக்கும் இடையே ஆழமான கலாசார மற்றும் வணிக உறவு இருந்தது” என்று கூறினார்.

பின்னர் பேசிய சீன அதிபர் ஜின்பிங், “மாமல்லபுரம் வருகையை என்னால் மறக்க முடியாது. தமிழகத்தின் சிறப்பான விருந்தோம்பலை நானும், எனது நண்பர்களும் நன்றாக உணர்ந்துள்ளோம். தமிழகத்தின் விருந்தோம்பல் எனக்கும், உடன் வந்தவர்களுக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். மிகச் சிறப்பாக வரவேற்பு அளித்தமைக்கு நன்றி. இருநாட்டு உறவும் மேம்பட்டு வருகிறது. இதுபோன்ற பேச்சுவார்த்தை தொடர வேண்டும்” என்று கூறினார்.

சீனாவுக்கு வருமாறு அழைப்பு

தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளின் எல்லை பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு, சுற்றுலா மேம்பாடு, விற்பனை சந்தையை விரிவுபடுத்துவது, தகவல் தொழில்நுட்ப துறையில் முதலீடுகளை ஈர்ப்பது போன்றவை குறித்து இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தையின் போது இதுபோன்ற முறைசாரா மாநாட்டில் கலந்து கொள்ள சீனாவுக்கு வருமாறு மோடிக்கு ஜின்பிங் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் இந்த பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உயர்மட்ட குழு

இந்தியா-சீனா இடையேயான உறவிலும், கருத்துவேறுபாடுகளுக்கு தீர்வு காண்பதிலும் புதிய அத்தியாயம் தொடங்கி இருக்கிறது. வர்த்தகம், பாதுகாப்பு, பயங்கரவாதத்தால் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமைந்து இருந்தது.

இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறையை பற்றி பேசி தீர்வு காண்பதற்காகவும், முதலீடு, நல்லெண்ண நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதற்காகவும் சீன தரப்பில் அந்த நாட்டின் துணை அதிபர் ஹூ சுன் ஹுவாவையும், இந்திய தரப்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும் கொண்ட உயர்மட்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. வர்த்தக பற்றாக்குறைகள் பற்றிய பேச்சுவார்த்தையை இந்த குழு நடத்தும். இது வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்லும் சாதகமான முயற்சியாக அமைந்து உள்ளது.

எந்தவொரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்றாலும் அது சமநிலை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது பிரதமரின் விருப்பம். அந்த ஒப்பந்தத்தில், எந்தெந்த சரக்குகளுக்கான வரி குறைக்கப்படுகிறது? என்பதோடு நின்றுவிடக்கூடாது. அதில் முதலீடுகள், சேவைகள் ஆகியவையும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார். இதில் சில பிரச்சினைகள் உள்ளன என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டாலும், இந்த கோரிக்கையை கவனத்தில் கொள்வதாக ஜின்பிங் தெரிவித்து உள்ளார்.

பயங்கரவாதம்

இந்தியாவுக்கு எப்படிப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது என்பது பற்றி பேசப்பட்டது. மத அடிப்படையிலான பயங்கரவாதத்தை கையாள்வது பற்றி இரு தலைவர்களும் பேசினார்கள். ஆனால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றெல்லாம் குறிப்பிட்டு பேசப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு விவகாரங்கள் இணைக்கப்பட்டு இருந்ததால் பயங்கரவாதம் பற்றிய பிரச்சினைகளை விரிவாக ஆலோசிக்கவில்லை.

இந்தியா-சீனா எல்லையில் அமைதி நிலவச் செய்வதில் இரு தலைவர்களுக்குமே மிகுந்த அக்கறை உள்ளது. அங்கு நிலவும் அமைதி இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும்.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படச் செய்ய வேண்டும் என்பதுதான் இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம்.

சென்னையில் சீன தூதரகம்

சென்னையில் சீன தூதரகத்தை தொடங்க அனுமதிப்பது தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இரு நாடுகளும் விரும்பும்போது அது அமைக்கப்படும். இந்த விஷயம் பற்றி தற்போது விவாதிக்கப்படவில்லை.

இந்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் மோடிதான். சீனா-தமிழகம் இடையே கலாசார, வர்த்தக உறவு இருப்பதே இதற்கான அடிப்படையாகும்.

சீன அதிபரை சந்திக்க எதிர்கட்சி தலைவரை ஏன் அனுமதிக்கவில்லை என்று கேட்டால், இது முறையான உச்சிமாநாடு அல்ல. இது முறைசாரா பேச்சுவார்த்தைதான். முறையான உச்சி மாநாடு டெல்லியில் நடப்பது உண்டு. அதில்தான் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்பான பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படும்.

இந்த பேச்சுவார்த்தை இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையேயான உறவை வளர்க்கும் நோக்கம் கொண்டது. எனவே வேறு அரசியல்வாதிகளை இதில் அழைத்து பேச வேண்டியதில்லை.

இவ்வாறு விஜய் கோகலே கூறினார்.

கலாசார தொடர்பு

அவர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், தமிழகத்துக்கும், சீனாவின் பிஜியன் மாகாணத்துக்கும் இடையேயான கலாசார தொடர்புகள் குறித்து ஆராய்ச்சி செய்ய தனி அகாடமி அமைக்க இருநாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

இந்தியா-சீனா இடையேயான ராஜாங்க உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து 70 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதில் 35 நிகழ்ச்சிகள் இந்தியாவிலும், 35 நிகழ்ச்சிகள் சீனாவிலும் நடத்தப்படும் என்றும், குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு ஒரு நிகழ்ச்சி என்ற முறையில் இரு நாடுகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story