கோவையில் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட கும்பல் கைது கத்தை, கத்தையாக பறிமுதல்


கோவையில் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட கும்பல் கைது கத்தை, கத்தையாக பறிமுதல்
x
தினத்தந்தி 13 Oct 2019 10:00 PM GMT (Updated: 13 Oct 2019 8:05 PM GMT)

கோவையில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அச்சடிக்கும் கருவிகள், ரூ.11½ லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை,

கோவை பொன்னையராஜபுரம் ரிலையன்ஸ் அவன்யூ என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜான் சாக்கோ (வயது 55). இவர் காந்திபார்க் ரவுண்டானா பகுதியில் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு 2 பேர் வந்து நூறு ரூபாய் நோட்டை கொடுத்து குளிர்பானம் வாங்கினார்கள்.

அப்போது அந்த ரூபாயின் சாயம் கையில் ஒட்டவே சந்தேகமடைந்த கடைக்காரர் கூச்சல் போட்டார். உடனே ஓட்டம் பிடித்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து ஜான்சாக்கோ ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆர்.எஸ்.புரம் போலீசார் 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, ஈரோடு மாவட்டம் காசிபாளையம், கே.கே. நகரை சேர்ந்த பூபதி (26), தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் (23) என்று தெரியவந்தது.

2 பேரிடம் இருந்தும், 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் 31 பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் இரவு முழுவதும் நடத்திய விசாரணையில் இந்த கும்பலுக்கு தலைவர்கள் விருதுநகரை சேர்ந்த தன்ராஜ் (32), கோவை கணபதியைச் சேர்ந்த ரஞ்சித் (27) என்று கூறினர். இவர்கள் இடிகரை பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து கள்ள ரூபாய் நோட்டுகளை தன்ராஜ் அச்சடித்து கூட்டாளிகள் மூலம் புழக்கத்தில் விட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே போலீசார் 2 பேரையும் அழைத்துக்கொண்டு இடிகரை சென்று தன்ராஜை வீட்டில் வைத்து கைது செய்தனர். அந்த வீட்டில் நடத்திய சோதனையில் ஒரு அறையில் கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய எந்திரம், பேப்பர், மை, கலர் ஜெராக்ஸ் கருவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அச்சடித்து புழக்கத்தில் விட வைத்து இருந்த 2000, 500, 200, 100, 50 கள்ளரூபாய் நோட்டுகள் கத்தை, கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.11 லட்சத்து 57 ஆயிரத்துக்கு இந்த நோட்டுகள் இருந்தன. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் தன்ராஜ் வசித்து வந்த வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்தனர். மேலும் தன்ராஜ் கொடுத்த தகவலின் பேரில் கணபதியைச் சேர்ந்த ரஞ்சித் (வயது 27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த கும்பல் கள்ள நோட்டுகளை அச்சடித்து கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் புழக்கத்தில் விட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதான தன்ராஜ், விருதுநகரில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து கைதாகி சிறை சென்றவர். ஜாமீனில் விடுதலையாகி மீண்டும் கள்ள நோட்டுகளை அடித்துள்ளார். அசல் ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்து, அதனை கணினியில் பதிவு செய்து, பின்னர் பிரிண்ட் எடுத்து கட் செய்து கள்ளரூபாய் நோட்டுகளை உருவாக்கி புழக்கத்தில் விட்டுள்ளனர்.

அதாவது அசல் ரூபாய் நோட்டு ஒன்று கொடுத்தால் 3 கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்து இதனை கடைகள், ஓட்டல்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர். பெரும்பாலும் இரவு நேரங்களில் கடைகள் மற்றும் ஓட்டல்களில் இதனை மாற்றியுள்ளனர். கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

கள்ள ரூபாய் நோட்டு கும்பலை கைது செய்த ஆர்.எஸ்.புரம் குற்றப்பிரிவு தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் சுமித்சரண், துணை கமிஷனர் பெருமாள் ஆகியோர் பாராட்டினார்கள்.

Next Story