லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 13 Oct 2019 11:45 PM GMT (Updated: 13 Oct 2019 10:26 PM GMT)

மு.க.ஸ்டாலின் லண்டன் செல்வது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் அங்குள்ள வங்கிகளில் பதுக்கப்பட்டு உள்ளதா? என்று நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நெல்லை,

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த தொகுதியில் தேர்தல் திணிக்கப்பட்டு உள்ளது. கடந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட்ட வசந்தகுமார், பதவி சுகத்துக்கு ஆசைப்பட்டு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது.

5 ஆண்டுகள் பணி செய்வார், தங்கள் பிரச்சினை தீரும் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்தீர்கள். ஆனால் அவர் சொந்த நலனை கருதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். உங்களை ஏமாற்றிய காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் மூலம் தக்கபாடம் புகட்டுங்கள்.

ஆளும்கட்சிக்கு மக்கள் வாக்களித்தால் உங்கள் தொகுதி பிரச்சினை தீருவதற்கு வாய்ப்பு உண்டு. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரன் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னையில் வசித்துவருகிறார். பெரிய கோடீஸ்வரர். அவர் வெற்றி பெற்றால் அவரை நீங்கள் சந்திக்கக்கூட முடியாது.

மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் என்றாலே திண்ணை பிரசாரம் தான் ஞாபகத்துக்கு வரும். பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களிடம் குறைகள் கேட்பார். கோரிக்கை மனுக்கள் பெறுவார். நான் கேட்கிறேன், இந்த கோரிக்கை மனுக்களை வாங்கி என்ன செய்யப்போகிறார். யாரிடம் இந்த மனுக் களை கொடுப்பார். இந்த மனுக்கள் எல்லாம் குப்பை தொட்டிக்கு தான் போய்ச்சேரும். எப்படி பொதுமக்களை ஏமாற்றுகிறார் பாருங்கள்.

மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்-அமைச்சராக பொறுப்பு வகித்தவர். அப்போதெல்லாம் இவர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்க வில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது தான் மக்களின் ஞாபகம் அவருக்கு வருகிறது.

ரூ.200 கோடி மதிப்பில் பச்சையாறு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் நாங்குநேரி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பொதுமக்களின் குடிநீர் பிரச்சினை தீரும்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், நான் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

நான் கேட்கிறேன், மு.க. ஸ்டாலின் 4 மாதங்களுக்கு ஒருமுறை லண்டன் சென்று வருகிறார் என்று பரவலாக பேசப்படுகிறது. அவர் உடல்நல குறைவால் செல்வதாக ஒருசிலர் கூறுகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தை லண்டனில் உள்ள வங்கிகளில் பதுக்கிவைத்து இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். எது உண்மை, எது பொய் என்று தெரியவில்லை. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.

அ.தி.மு.க. அரசு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. ஆனால் கடந்த முறை தி.மு.க. 96 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சி நடத்தியது. எங்கள் ஆட்சி மெஜாரிட்டி ஆட்சி. அ.தி.மு.க. அரசை பற்றி விமர்சனம் செய்ய மு.க.ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது. மக்களுக் காக போராடும் ஒரே கட்சி அ.தி.மு.க. தான். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story