நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளால் தி.மு.க. வெற்றி; முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளால் தி.மு.க. வெற்றி; முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 14 Oct 2019 1:06 PM GMT (Updated: 14 Oct 2019 1:06 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க. வெற்றி பெற்றது என நாங்குநேரி பிரசாரத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார்.

நாங்குநேரி,

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 21ந்தேதி நடைபெற உள்ளது.  இதற்கான தேர்தல் பிரசார பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வி.நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டு உள்ளனர்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. வருகிற 19ந்தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய இருக்கிறது.  இதனால், தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

எடப்பாடி பழனிசாமி இன்று நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக திறந்தவெளி வேன் மூலம் பிரசாரம் மேற்கொண்டார். அவர் 16 மற்றும் 17ந்தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியிலும், 18ந்தேதி மீண்டும் நாங்குநேரி தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.

நாங்குநேரியில் முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டு பேசும்பொழுது, நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து தி.மு.க. வெற்றி பெற்றது என கூறினார்.

ஆனால் தி.மு.க. அளித்த வாக்குறுதிகள் என்னவானது? என கேள்வி எழுப்பிய முதல் அமைச்சர், செய்ய முடியாத காரியங்களை எல்லாம் கூறி தி.மு.க. தலைவர் வாக்கு பெற்றார் என்று கூறியுள்ளார்.

பா.ஜ.க.வின் பினாமி அ.தி.மு.க. என கூறி வருகின்றனர்.  ஆனால் மக்களுக்கு எதிரான திட்டங்களை அ.தி.மு.க. அரசு எதிர்த்தே வந்துள்ளது.  முத்தலாக் சட்ட மசோதா அவையில் கொண்டு வரப்பட்டபொழுது அ.தி.மு.க. அதற்கு எதிராகவே வாக்களித்தது என அவர் கூறியுள்ளார்.

Next Story