ராஜீவ்காந்தி பற்றி சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு


ராஜீவ்காந்தி பற்றி சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 14 Oct 2019 11:36 PM GMT (Updated: 14 Oct 2019 11:36 PM GMT)

ராஜீவ்காந்தி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி, 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, மாநில செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் எம்.பி., விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்தியும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசியுள்ளார். இது தேச பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கிற செயலாகும். ஒரு தேசத்தின் முன்னாள் பிரதமரை இன துரோகி என்றும், நாங்கள் தான் கொலை செய்தோம் என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சீமான் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் இதுகுறித்து விசாரணை நடத்துவதாக கூறினார்.

இந்நிலையில் தலைவர்களை அவதூறாக பேசுதல் (பிரிவு 504), பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் (பிரிவு 153) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் சீமான் மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீமானின் இந்த பேச்சை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சீமான் வீடு மற்றும் அவரது கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடும் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டுக்கும், போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்துக்கும் போரூர் இன்ஸ்பெக்டர் சங்கர் நாராயணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி சீமான் கூறியதாவது :-

மக்கள் பிரச்சினைக்கு போராடியது இல்லை

இது போன்ற பல்வேறு வழக்குகள் என்மேல் பதியப்பட்டு உள்ளது. அதையெல்லாம் எதிர்கொண்டுதான் வந்துள்ளோம். காங்கிரஸ்காரர்கள் கொந்தளிக்கிறார்கள், போராடுகிறார்கள் என்றால் மகிழ்ச்சியாக உள்ளது.

உள்ளே இருக்கின்ற சிதம்பரத்தை வெளியே கொண்டு வரவும், வெளியே உள்ள என்னை உள்ளே தள்ளவும் போராடுகிறார்கள். காங்கிரஸ் கட்சியினர் மக்கள் பிரச்சினைக்காக எப்போதுமே போராடியது இல்லை. நான் பேசியதற்காகவாவது போராடுகிறார்களே என நினைத்து கொள்ளவேண்டிய துதான்.

நான் பேசியதால் என்ன கலவரம் வந்து விட்டது. காங்கிரஸ் கட்சியினருக்குள்தான் கலவரம் வந்துள்ளது. வழக்கு வந்தால் சட்டப்படி எதிர்கொள்வோம்.

எங்கள் இனத்தின் தலைவனை முன்னிறுத்தி அரசியல் செய்யாமல் வேறு யாரை வைத்து அரசியல் செய்வது. இடைத்தேர்தலில் இருந்து மற்ற கட்சிகள் போல நாங்கள் வெளியேறுவது இல்லை. எந்த தேர்தல் களத்திலும் நின்று எங்களுடைய கருத்து பரப்புரையை செய்து மக்களுக்கு மிக அருகில் செல்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சீமான் தூத்துக்குடி செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கை 28 ஆண்டுகளாக பேசிக்கொண்டு விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்துவிட்டதாக கூறுகின்றனர். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்து கொண்டு இருக்கிறார்கள். இது தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட அவமானம்.

ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலைக்கு எவ்வளவு முட்டுக்கட்டைகள். தேசிய ஒருமைப்பாட்டை பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு என்ன உரிமை உள்ளது. ஆட்சியில் இருந்தபோது காவிரி நதி நீரை பெற்றுத்தர முடிந்ததா?

ராஜீவ்காந்தியை கொன்று விட்டதாக கூறித்தான் இலங்கையில் போர் செய்து லட்சக்கணக்கான மக்களை கொன்றார்கள். இலங்கையில் போர் நடத்தியது காங்கிரஸ் அரசுதான். அதற்கு தி.மு.க. உடன் நின்றதை யாராவது மறுக்க முடியுமா?. ஒரு மரணத்துக்காக ஒரு இனத்தின் மரணத்தை சமப்படுத்தி நிறுத்தி உள்ளனர்.

பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சமமாகத்தான் பார்க்கிறோம். கச்சத்தீவு கொடுத்தது கொடுத்ததுதான் என 2 கட்சிகளும் சொல்கிறது. அணு உலையை எதிர்த்து போராடினால் தேச துரோகி என 2 கட்சிகளும் சொல்கிறது. நீட் மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவற்றை கொண்டு வந்தது காங்கிரஸ். அதை செயல்படுத்தியது பா.ஜனதா கட்சி.

நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருப்பதற்கு ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்ததுதான் காரணம். எல்லா திட்டங்களையும் இந்த 2 கட்சிகள்தான் கொண்டு வந்தது. கதர் கட்டிய பா.ஜனதா, காவி கட்டிய காங்கிரஸ். இந்த 2 கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

சீன அதிபரை தமிழகத்தில் சந்தித்ததால் பிரதமர் மோடி வேட்டி கட்டி இருப்பார். எனினும் தமிழனின் பாரம்பரிய உடையை பிரதமர் அணிந்தது மகிழ்ச்சிதான்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story