நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித்சூர்யாவின் தந்தையே வில்லன் -மதுரை ஐகோர்ட் கிளை


நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித்சூர்யாவின் தந்தையே வில்லன்  -மதுரை ஐகோர்ட் கிளை
x
தினத்தந்தி 15 Oct 2019 9:41 AM GMT (Updated: 15 Oct 2019 9:41 AM GMT)

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித்சூர்யாவின் தந்தையே வில்லன் என மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்து உள்ளது.

மதுரை,

நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன், மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பானின் தந்தை முகமது ஷபி, தர்மபுரியை சேர்ந்த மாணவி பிரியங்கா, அவருடைய தாயார் மைனாவதி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கில் உதித்சூர்யா கைதாவதற்கு முன்பு மதுரை ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவர் கைதான நிலையில் முன்ஜாமீன் மனு ஜாமீன் மனுவாக மாற்றப்பட்டுள்ளது. உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஜாமீன் கேட்டு தேனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் உதித்சூர்யாவின் ஜாமீன் மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று  விசாரணைக்கு வந்தது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித்சூர்யாவுக்கு அவரது தந்தைதான் வில்லன். கைது செய்யப்பட்டு 15 நாள்களுக்கு மேலாகியும் காவல்துறையினர் அவரை விசாரணைக்கு எடுக்காதது ஏன்? மன்னிக்க முடியாத குற்றம் நடைபெற்றுள்ளது என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள் என சிபிசிஐடி  தரப்பில் கூறப்பட்டது. இதனால்  உதித்சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை அக். 17-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Next Story