களைகட்டிய இடைத்தேர்தல் பிரசாரம்..! -அமைச்சர் கருப்பண்ணன் உற்சாகமாக நடனம்


களைகட்டிய இடைத்தேர்தல் பிரசாரம்..! -அமைச்சர் கருப்பண்ணன் உற்சாகமாக நடனம்
x
தினத்தந்தி 15 Oct 2019 12:01 PM GMT (Updated: 15 Oct 2019 12:01 PM GMT)

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் நடனமாடி வாக்கு சேகரித்தார்.

சென்னை

நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அந்தத் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கடம்போடுவாழ்வு மற்றும் சவலைக்காரன்புதூர் மேலூர் ஆகிய கிராமங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சியில் பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டார்.

நெல்லை நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதைசேரி, ராமசந்திரபுரம், கோசால்ராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விசாரணை முடிந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டும் அந்த பிரச்சினையை சீமான் எடுத்து இருக்கக் கூடாது என்றார். குறுகிய எண்ணத்தை தமிழர்களிடம் விதைத்து அதன் மூலம் ஆதாயம் பெற்று விடலாம் என்ற நப்பாசையுடன் இருக்கும் சீமானை தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ஜெயக்குமார் விமர்சித்தார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் கே.சி.கருப்பணன் செம்மேடு கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனால் உற்சாகமடைந்த கருப்பணன், தானும் நடனமாட தொடங்கினார். அவருடன் கிராம மக்கள் சிலரும் சேர்ந்து கொண்டதால் நடனம் களைகட்டியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று மாம்பழப்பட்டு கிராமத்தில் அவர் வாக்கு சேகரித்தார்.

புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் இறுதி கட்ட பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தலைவர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதல்வர் நாராயணசாமியும், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஷ்வரனை ஆதரித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ரங்கசாமியும்  தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Next Story