மாநில செய்திகள்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு எத்தனை பேர் பலி? ஐகோர்ட்டில் அரசு விளக்கம் + "||" + In TamilNadu How many people die from dengue fever? Government description in High court

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு எத்தனை பேர் பலி? ஐகோர்ட்டில் அரசு விளக்கம்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு எத்தனை பேர் பலி? ஐகோர்ட்டில் அரசு விளக்கம்
நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சலினால் எத்தனை பேர் பலியாகியுள்ளனர்? என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.பி.சூர்யபிரகாசம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பல மாவட்டங்களில் பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல குழந்தைகள் இந்த காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.


அதே நேரம், தமிழக அரசு, சுகாதாரத்துறையில் பல பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இதனால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட போதிய ஊழியர்கள் இல்லை.

எனவே, இந்த பணியிடங்களை நிரப்பவும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும் விரைவாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் செயலாளர் கே.எஸ்.செல்வகுமார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் நோயாளிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். டெங்கு காய்ச்சலை முன்கூட்டியே கண்டறிந்து, அவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 9 மண்டலங்களில், பூச்சியியல் வல்லுநர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டு, டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் அதிகம் உள்ள பகுதிகளில், அதை தடுக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

டெங்கு கொசுக்களை அழிப்பதற்காக தமிழகம் முழுவதும் 28 ஆயிரத்து 147 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு வீடாக சென்று டயர், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகளை தேங்கியிருக்கும் நீரை அகற்றி, அதில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் பார்த்துக்கொள்கின்றனர். கொசு உற்பத்தியாவதை தடுக்க எடுக்க வேண்டிய வழிமுறைகளை பொதுமக்களுக்கு சொல்லி கொடுக்கின்றனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று டெங்கு கொசுக்கள் அழிப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். மாணவர்கள் டெங்கு காய்ச்சல் வந்தால், அதுகுறித்து ஆரம்ப சுகாதார மையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். ஊடகங்கள் மூலம் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு விளம்பரங்களும் செய்யப்படுகின்றன.

பள்ளி மாணவர்களை ‘தூய்மை தூதுவர்கள்’ என்று அறிவித்து, அவர்கள் மூலம் டெங்கு கொசுக்கள் எப்படி உற்பத்தியாகுகிறது? அதை தடுப்பது எப்படி? என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

சுயஉதவி குழுக்கள், நேரு யுவகேந்திரா, வாலிபர்கள் சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் மூலம் டெங்கு காய்ச்சல் ஒழிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ்‘ கொசுக்களை ஒழிக்க ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை, ‘ஏடிஸ் கொசு எதிர்ப்பு தினமாக’ கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டிலேயே, தமிழகத்தில் தான் 125 எலிசா பரிசோதனை மையங்கள் உள்ளன.

அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தனி வார்டு உருவாக்கி, டெங்கு காய்ச்சலினால் பாதிப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. ‘டாம்கால்’ நிறுவனத்திடம் இருந்து நிலவேம்பு பொடி கொள்முதல் செய்து, போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 1 கோடி பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்க இலவச தொலைப்பேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கடந்த செப்டம்பர் 23-ந்தேதி மாநில அளவில் ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டது.

தமிழகத்தில், டெங்கு காய்ச்சலினால் கடந்த 2015-ம் ஆண்டு 4 ஆயிரத்து 535 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 12 பேர் பலியாகினர். 2016-ம் ஆண்டு 2 ஆயிரத்து 531 பேருக்கு டெங்கு காய்ச்சல் வந்து, 5 பேரும், 2017-ம் ஆண்டு 23 ஆயிரத்து 294 டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, அதில் 63 பேர் பலியாகினர்.

2018-ம் ஆண்டு 4 ஆயிரத்து 486 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு, 13 பேர் பலியாகினர். நடப்பு ஆண்டில் இதுவரை 3 ஆயிரத்து 223 பேர் டெங்கு காய்ச்சல் வந்தது. அதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு தமிழக முதல்-அமைச்சரின் ஒருங்கிணைந்த விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்படுகிறது.

சுகாதாரத்துறையில் காலியாக இருந்த 334 பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் பணியிடங்கள் கடந்த ஆகஸ்டு மாதம் நிரப்பப்பட்டன. டெங்கு காய்ச்சல் மட்டுமல்லாமல், மர்ம காய்ச்சலை அடியோடு ஒழிக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ள. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
2. தமிழகத்தில் இன்று முதல் மாநகராட்சி பகுதிகளில் கோவில்கள் திறப்பு
இன்று முதல் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சி எல்லைப் பகுதிகளில், 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் வரும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
3. தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை தகவல்
தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 41 சதவீதம் குறைவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இதுவரை 41 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.
5. தமிழகத்தில் இன்று 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.