தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு


தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
x
தினத்தந்தி 17 Oct 2019 11:30 PM GMT (Updated: 17 Oct 2019 9:08 PM GMT)

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, அடிப்படை ஊதியத்தில் இதுவரை 12 சதவீதமாக இருந்த அகவிலைப்படி இனி 17 சதவீதமாக வழங்கப்படும்.

சென்னை,

இதுதொடர்பாக நிதித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக கடந்த ஜனவரியில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு கடந்த 14-ந் தேதி வெளியிட்டது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1-ந் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படியை 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த அறிவிப்பின் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை அதே அளவான 5 சதவீதம் அதிகரித்து உத்தரவிடப்படுகிறது.

அரசு அலுவலகங்களில் முழுநேரமாகப் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும். பகுதி நேரமாகப் பணிபுரிவோருக்கு அகவிலைப் படி உயர்வு பொருந்தாது. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாதோர், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பணியாளர்கள், பல்கலைக்கழக மானியக் குழு அல்லது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுவின் ஊதிய விகிதத்தில் பணிபுரிவோர், உடல் கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்கள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் நூலகர்கள், வருவாய்த் துறையில் பணியாற்றும் வருவாய் உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் எழுத்தர்கள் ஆகியோருக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளனர். ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு பொருந்தும். அதன்படி, 18 லட்சம் பேர் பயனடைவார்கள். அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.750 முதல் அதிகபட்சம் ரூ.11ஆயிரத்து 250 வரை ஊதியம் உயரும். ஓய்வூதியர்களுக்கு ரூ.450 முதல் ரூ.5,575 வரை ஓய்வூதியம் அதிகரிக்கும்.

Next Story