அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் மழை தீவிரம் அடைகிறது - வானிலை ஆய்வு மையம் தகவல்


அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் மழை தீவிரம் அடைகிறது - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 18 Oct 2019 12:15 AM GMT (Updated: 17 Oct 2019 9:26 PM GMT)

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 14 செ.மீ. மழை பெய்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. பல மாவட்டங்களில் நேற்றும் பரவலாக மழை நீடித்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக மஞ்சூர்-ஊட்டி சாலையில் மேரிலேண்ட் என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மலை ரெயில் பாதையில் அடர்லி, ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே 2 ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்தன.

இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி நேற்று காலை 170 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த மலை ரெயில் அடர்லி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. மரங்களை வெட்டி அகற்றிய பிறகு காலை 10 மணிக்கு அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

கனமழை காரணமாக கல்லாறு பகுதியில் மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதால், நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) வரை குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக் குள் தண்ணீர் புகுந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் மதியம் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. கொடைக்கானல், தேனி, பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளிலும் மழை பெய்தது.

சேலம் மாவட்டத்தில் லேசான மழை பெய்தது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இதுதவிர கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. எட்டயபுரத்தில் 14 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதிகளிலும் மழை பெய்தது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.

மாநிலம் முழுவதும் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. வருகிற 20 மற்றும் 21-ந்தேதிகளில் மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வடதமிழகம், தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்தது. தற்போது அது படிப்படியாக விலகி அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) மழை குறைந்து காணப்படும். இந்த நாட்களில் வெப்பசலனத்தால் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வருகிற 20-ந்தேதி (நாளை மறுதினம்) அந்தமான் கடல் பகுதியில் இருந்து ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தை நோக்கி வருகிறது. இதனால் 20-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஆரம்பித்து, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பும் அதிகம் இருக்கிறது.

சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று), நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த மாதம் இறுதி வரை இதுபோன்று மழை குறைந்தும், அதிகரித்தும் காணப்படும்.

மேலும், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகி இருப்பதால், மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய கேரள கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் முக்கியமான இடங்களில் பெய்த மழை அளவு வருமாறு:-

எட்டயபுரம் 14 செ.மீ., கொட்டாரம், கொடைக்கானல் தலா 13 செ.மீ., கடலாடி 12 செ.மீ., பரமக்குடி 10 செ.மீ., திருவாரூர், திருவாடனை தலா 9 செ.மீ., தொண்டி 8 செ.மீ., விளாத்திகுளம், தேவகோட்டை, மாமல்லபுரம், திருவண்ணாமலை, திருபுவனம், வல்லம் தலா 7 செ.மீ., தர்மபுரி, கூடலூர், பூந்தமல்லி, போடிநாயக்கனூர், செம்பரம்பாக்கம், மன்னார்குடி, தூத்துக்குடி, கேத்தி தலா 6 செ.மீ. மழை பெய்து இருக்கிறது.

Next Story