தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ஆளுங்கட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை - மு.க.ஸ்டாலின்


தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ஆளுங்கட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 19 Oct 2019 6:28 AM GMT (Updated: 19 Oct 2019 6:28 AM GMT)

தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ஆளுங்கட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி, மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணனும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் உள்ளிட்ட பலரும் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோல, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனும், திமுக வேட்பாளர் புகழேந்தி உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றனர்.

இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதையடுத்து, வாக்குப்பதிவுக்கான பணிகளை அதிகாரிகள் விறுவிறுப்பாக மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது. பாதுகாப்புக்காக 800 போலீசார் குவிக்கப்பட உள்ளனர். இதைதவிர, துணைநிலை ராணுவம் உள்ளிட்டோரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில்  நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.  விக்கிரவாண்டி ஈச்சங்குப்பத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- 

ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் இல்லை. ஜெயலலிதா மீது நாங்கள் வழக்கு போடவில்லை. சுப்பிரமணிய சாமி தான், ஜெயலலிதா மீது வழக்கு போட்டார். உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ஆளுங்கட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. 

அதிமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என உறுதியளித்தனர், ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. முதலமைச்சர் பழனிசாமி நீட் தேர்வுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார்.

உச்சநீதிமன்றம் வரை சென்று நீட் தேர்வை தடுத்தவர் கருணாநிதி. இரண்டு தொகுதி இடைத்தேர்தலுடன் அதிமுக வீட்டுக்கு போய்விடும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவினர் சிறைக்கு செல்வது உறுதி.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story