பணம் பறிமுதல் விவகாரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பு? தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் சத்யபிரத சாகு தகவல்


பணம் பறிமுதல் விவகாரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பு? தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் சத்யபிரத சாகு தகவல்
x
தினத்தந்தி 19 Oct 2019 11:38 PM GMT (Updated: 19 Oct 2019 11:38 PM GMT)

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

சென்னை,

நாங்குநேரியில் கைப்பற்றப்பட்ட ரூ.2 லட்சத்து 87 ஆயிரம் விவகாரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணகுமாருக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் நிலையில், இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ளோம் என்று சத்யபிரத சாகு கூறினார்.

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் 21-ந்தேதி (திங்கட்கிழமை) காலை இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தற்போது 2 தொகுதிகளுக்கும் பிரசாரம் நிறைவடைந்து உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்பி வைக்கும் பணி நாளை (இன்று) தொடங்கு கிறது. இந்த எந்திரங்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு பரிசோதித்து காண்பிக்கப்படுகிறது. தேர்தலுக்கு 1 நாள் மட்டுமே இருப்பதால் அந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம். தேர்தல் பார்வையாளர்களும் நாளை (இன்று) முதல் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர்.

இதுவரை நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பிலான பணம், நகை மற்றும் மதுபானங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இதுவரை பதியப்பட்ட வழக்குகள் மற்றும் பெறப்பட்ட புகார்கள் குறித்தான தகவல்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

நாங்குநேரியில் கைப்பற்றப்பட்ட ரூ.2 லட்சத்து 87 ஆயிரம் விவகாரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணகுமாருக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் நிலையில், இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ளோம்.

இதுவரை தமிழகம் முழுவதும் 47.83 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் விவரங்களை சரிபார்த்து உள்ளனர். இதில் அதிகப்படியாக பெரம்பலூர் மாவட்டத்தில் 98.71 சதவீதமும், குறைந்தபட்சம் சென்னையில் 13.6 சதவீதம் பேரும் சரிபார்த்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story