ஆவடி அருகே துணிகரம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளை


ஆவடி அருகே துணிகரம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 19 Oct 2019 11:46 PM GMT (Updated: 19 Oct 2019 11:46 PM GMT)

ஆவடி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடி,

ஆவடியை அடுத்த முத்தாபுதுபேட்டை அருகே உள்ள காவனூர் பகுதியில் பெரிய பாளையம்-திருநின்றவூர் சாலையில் ஏ.டி.எம். மையம் உள்ளது. இதை சுற்றிலும் வீடு, கடைகள் உள்ளன. இங்கு காவலாளி கிடையாது.

நேற்று மதியம் அந்த ஏ.டி.எம். மையத்தை பார்வையிட வந்த ஊழியர் விஜய், ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி முத்தாபுதுபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன், முத்தாபுதுபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த கொள்ளையன், இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருந்த ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளான். முன்னதாக கொள்ளையன், தனது உருவம் பதிவாகாமல் இருக்க ஏ.டி.எம். மையத்தின் உள்ளே உள்ள கேமராவில் ‘ஸ்பிரே’ அடித்து இருப்பது தெரிந்தது.

ஏ.டி.எம். மையத்தின் வெளியே உள்ள கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் மற்றும் மழைக்கோட்டு அணிந்தபடி வரும் மர்மநபர், முதுகில் பேக் ஒன்றை மாட்டி உள்ளான். ஏ.டி.எம். மையத்தின் உள்ளே செல்லும் அவர், சிறிது நேரம் கழித்து வெளியே வந்து மோட்டார்சைக்கிளில் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள், ஏ.டி.எம். எந்திரத்தில் பதிவான கொள்ளையனின் கைரேகைகளை பதிவு செய்துகொண்டனர். இதுபற்றி முத்தாபுதுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.

அதேபோல் ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்துக்குள்ளும் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.

ஆனால் அவர்களால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்று விட்டனர். இதனால் அதில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது. இதுபற்றி அந்த வங்கி ஊழியர் கேசவன் அளித்த தகவலின்பேரில் திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்களின் உருவத்தை வைத்து அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story