‘டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகரித்துள்ளது’ பட்டமளிப்பு விழாவில், எடப்பாடி பழனிசாமி பேச்சு


‘டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகரித்துள்ளது’ பட்டமளிப்பு விழாவில், எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 21 Oct 2019 12:00 AM GMT (Updated: 20 Oct 2019 9:55 PM GMT)

‘டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகரித்துள்ளது’ என்று பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

பட்டமளிப்பு விழா என்ற இந்த அருமையான நிகழ்வில் பங்கேற்பது தனிச்சிறப்பாகும். உங்களுக்காக காத்திருக்கும் பெருமை வாய்ந்த பொறுப்புகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் தருணம் இதுவாகும்.

மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான உங்களது பொறுப்புகளை நிறைவேற்ற உறுதி எடுத்துக்கொள்ளும் தருணமும் இதுதான். நானும் இன்று கவுரவ டாக்டர் பட்டம் பெற்றதின் மூலம், எனது பொறுப்புகளும் அதிகரித்துள்ளன.

போற்ற வேண்டியவை ‘உண்மை, உழைப்பு, உயர்வு’, பின்பற்ற வேண்டியவை ‘கனிவு, பணிவு, துணிவு’, பேண வேண்டியவை ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்றார் அண்ணா. அண்ணாவின் இந்த அறிவுரையை சமூகப்பணி ஆற்றச் செல்லும் நீங்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றை யவை’. ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியாகும். மற்ற செல்வங்கள் எல்லாம் அத்தனை சிறந்தவை அல்ல என்றார் வள்ளுவர்.

தரமான கல்வி நிறுவனங்கள் மூலம் மனிதவள மேம்பாட்டை ஊக்குவித்து, உயர்தரம் வாய்ந்த கல்வியாளர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்குவதும், பல்கலைக்கழக கல்வியில் தமிழ்நாட்டை ஒரு பன்னாட்டு மையமாக உருவாக்குவதுமே எனது அரசின் லட்சியம் என்றார் ஜெயலலிதா.

கல்லூரிகளில் 50 சதவீதத்தினருக்கும் மேல் கல்வி பயில வகை செய்தல் எனது நோக்கமாகும் என்ற ஜெயலலிதா, தமிழ்நாட்டில் 65 கல்லூரிகளை தொடங்கினார். அவருடைய வழியில் வந்த எங்கள் அரசும், 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 5 பாலிடெக்னிக் கல்லூரிகளை தொடங்கி உள்ளது.

மேலும் 6 மாவட்ட தலைநகரங்களில் புதிய மருத்துவ கல்லூரி திறக்க வேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசு அந்த கோரிக்கையினை தற்போது பரிசீலித்து வருகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஒரு சமூகத்தின் வளர்ச்சி, பொருளாதார பரிணாம வளர்ச்சியுடன் மட்டும் நின்று விடுவதில்லை. உணவு, கல்வி, மருத்துவம், குடியிருப்பு, உடை ஆகியவற்றுக்கு வகை செய்யும் பொருள் வசதி மிக முக்கியமானது தான். அதே நேரம், வாழ்க்கையை கற்க, மனிதனின் அகம் மேன்மையடைய, இலக்கியம், சிந்தனைகள், நீதிக் கதைகள் ஆகியவை வழியே கிடைக்கும் விவேகம் ஆகியவற்றைப்பற்றி அறிந்துகொள்வதும் மிகவும் முக்கியமானது. இது இரண்டையும் ஒருங்கே கற்பவனே ஒரு முழு மனிதன் ஆவான்.

மாணவர்களாகிய நீங்கள் எவ்வளவுதான் படித்திருந்தாலும், உங்கள் கல்வி முழுமை பெற, நீங்கள் ஏட்டுக்கல்வியுடன், வாழ்க்கை கல்வியையும் சேர்ந்து கற்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story