சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 21 Oct 2019 11:32 AM GMT (Updated: 21 Oct 2019 11:32 AM GMT)

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வழங்கப்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அறையின் முன்பு தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து உயர்நீதிமன்றத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின்(CISF) பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, 2015 நவம்பர் 16 முதல் உயர் நீதிமன்றத்துக்கு சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

ஆண்டுதோறும் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், வரும் அக்டோபர் 31ம் தேதியுடன் பாதுகாப்பு முடிய உள்ளது. இந்நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை நீட்டிப்பது தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சரவணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் பொது வழக்கறிஞர் ராஜகோபாலன், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு இல்லாத இடங்களில் கொலை முயற்சி, போராட்டங்கள் போன்றவை நடைபெற்று வருவதால், உயர்நீதிமன்ற வளாகம் முழுவதும் நிரந்தரமாக மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர்நீதிமன்றம் முழுவதும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டால், வழக்கறிஞர்கள் அறைகளுக்கு வரும் வழக்கு தொடர்பவர்கள் சிரமத்திற்குள்ளாவார்கள் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வழங்கி வரும் பாதுகாப்பை மறு உத்தரவு வரும் வரை நீடித்து உத்தரவிட்ட நீதிபதிகள், சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக பரிசீலித்து 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற பாதுகாப்பு குழுவுக்கு உத்தரவிட்டனர்.

Next Story