சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி வீட்டில் துப்பாக்கி பறிமுதல் கூட்டாளிகள் 3 பேர் சிக்கினர்


சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி வீட்டில் துப்பாக்கி பறிமுதல் கூட்டாளிகள் 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 22 Oct 2019 8:17 PM GMT (Updated: 22 Oct 2019 8:17 PM GMT)

சென்னை அண்ணா சாலை பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி வீட்டில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரது கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை அம்பேத்கர் பாலம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 30). இவர் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜெயிலில் அடைக்கப்பட்ட இவர் சமீபத்தில் தான் வெளியில் வந்தார்.

சென்னை அண்ணாசாலை கேசினோ தியேட்டர் அருகே சமீபத்தில் இவரது கூட்டாளிகள், ரவுடி அழகுராஜா என்பவரையும், அவரது தாயார் மலர்க்கொடியையும் அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சி நடந்தது. அப்போது அழகுராஜா தரப்பினர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி உயிர் தப்பினார்கள். அரிவாள் வெட்டு வழக்கில் சிவக்குமாரின் கூட்டாளிகள் 3 பேர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும் 2 பேரை சென்னை அண்ணாசாலை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் ரவுடி சிவக்குமாரும், அவரது கூட்டாளி ராஜ்குமாரும் விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் அருகே வலசை கிராமத்தில் பதுங்கியிருப்பதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டம் போலீசார் வலசை கிராமத்தை சுற்றி வளைத்தனர். அப்போது காரில் தப்பி செல்ல முயன்ற சிவக்குமாரையும், அவரது கூட்டாளி ராஜ்குமாரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சென்னை மயிலாப்பூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து சென்னை மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் பகுதியில் உள்ள சிவக்குமாரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ஒரு கைத்துப்பாக்கியும், 8 பட்டா கத்திகளும் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சிவக்குமாரின் கூட்டாளிகள் 3 பேரையும் மயிலாப்பூர் போலீசார் கைது செய்தனர்.

Next Story