சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்னிலை; கட்சி தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் கொண்டாட்டம்


சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்னிலை; கட்சி தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2019 6:50 AM GMT (Updated: 24 Oct 2019 6:50 AM GMT)

சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. முன்னிலை பெற்றுள்ள நிலையில், கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

சென்னை,

நாங்குநேரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.  இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிட்டார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க.வை சேர்ந்த ராதாமணி உடல்நல குறைவால் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி இறந்தார். இதையடுத்து காலியானதாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் 21-ந் தேதி நடைபெற்றது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முத்தமிழ்செல்வன் போட்டியிட்டார்.

இந்த இரு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.  இதில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

இதனால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும், மேளங்கள் முழங்க ஆடி, பாடியும் தலைவர்களின் சிலைக்கு பாலபிஷேகம் செய்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story