ராமநாதபுரம் அருகே, வேனில் மயில் அடிபட்ட தகராறில் டிரைவர் குத்திக்கொலை


ராமநாதபுரம் அருகே, வேனில் மயில் அடிபட்ட தகராறில் டிரைவர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 24 Oct 2019 11:15 PM GMT (Updated: 2019-10-25T01:17:03+05:30)

சரக்கு வேன் மோதியதில் மயில் அடிபட்டதால் ஏற்பட்ட தகராறில் டிரைவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கொத்தனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 47). சரக்கு வேன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் திருப்புல்லாணி அருகே உள்ள வண்ணாங்குண்டு வழியாக சரக்கு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் நின்று கொண்டிருந்த மயில் மீது சரக்கு வாகனம் மோதியதில் மயில் காயமடைந்துள்ளது.

இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த கொத்தனார் திருஞானபாண்டியன்(47) கண்டித்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த மயில் வனத்துறையினர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் சக்திவேல் அந்த வழியாக சரக்கு வாகனத்தில் சென்றபோது அவரை வழிமறித்த திருஞானபாண்டியன் மயிலை காயப்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது குறித்து கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த திருஞானபாண்டியன் கத்தியால் சக்திவேலை மார்பில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த திருப்புல்லாணி போலீசார் விரைந்து சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொத்தனார் திருஞானபாண்டியனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story