தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது - கே.எஸ்.அழகிரி கருத்து


தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது - கே.எஸ்.அழகிரி கருத்து
x
தினத்தந்தி 24 Oct 2019 9:00 PM GMT (Updated: 24 Oct 2019 8:40 PM GMT)

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ்-தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறாதது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.

ஜனநாயகத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிற தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத நிலை உருவாகி வருகிறது. நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் அமோக ஆதரவுடன் வெற்றி பெறுவார் என அனைவருடைய எதிர்பார்ப்பும் இருந்தது.

இந்தநிலையில் ஆளுங்கட்சியின் வெற்றி என்பது வழங்கப்பட்டது அல்ல, பல்வேறு உத்திகளினால் பெறப்பட்டது என்பதை கூற கடமைப்பட்டிருக்கிறேன். கடுமையான சூழலில் ஆளுங்கட்சியை எதிர்த்து போட்டியிடுவதற்கு துணிவுடன் முன்வந்து வேட்பாளராக போட்டியிட்ட ரூபி மனோகரனை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

காங்கிரஸ் தொண்டர்களுக்கும், தோழமை கட்சியினரும் இமைப்பொழுதும் சோராதிருந்து கடுமையாக உழைத்தனர். அதேபோன்று, காங்கிரஸ் வேட்பாளருக்கு மிகக் கடுமையாக உழைத்த தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சியினருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலிலும், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இத்தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது என்பதை கடந்த காலங்களில் நாடு பார்த்தது.

இந்த இடைத்தேர்தலில் தமிழ்நாட்டில் முழுக்க, முழுக்க ஆளும் கட்சியின் அதிகார பலம், அள்ளி வீசப்பட்ட வெள்ளிக்காசுகள் வெற்றியை தீர்மானித்து இருக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் தேர்தல் களத்தில் தங்கள் கடமையைச் செய்தனர். வரும் தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றுவோம். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி 2021-ல் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டம் என முதல்-அமைச்சர் கூறியிருப்பது எதார்த்தத்திற்கு பொருத்தமற்றதாகும்.

இந்த இடைத்தேர்தலில் அ.தி. மு.க. கூட்டணியின் அதிகாரம், ஆட்சி மற்றும் பணபலம் வெற்றி பெற்றுள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும். நாட்டின் பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் மராட்டியம், அரியானா மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலிலும் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணியின் செல்வாக்கு பெருமளவு சரிந்துள்ளது. மோடி- அமித்ஷா அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து வருவதின் தொடக்கமே இத்தேர்தல் முடிவுகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிகார அழுத்தமும், வரம்பற்ற பணச்செலவும் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்படுத்தியிருப்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தி இருக்கிறது. இது நிரந்தரமானதோ, முடிவானதோ அல்ல என்பதை அனைவரும் அறிவர்’ என்று கூறியுள்ளார்.

Next Story