வன்னியர்களின் வாக்குகளை பெற சாதி அரசியல் செய்தது யார்? மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் ராமதாஸ் கேள்வி


வன்னியர்களின் வாக்குகளை பெற சாதி அரசியல் செய்தது யார்? மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் ராமதாஸ் கேள்வி
x
தினத்தந்தி 25 Oct 2019 8:03 PM GMT (Updated: 2019-10-26T01:33:37+05:30)

வன்னியர்களின் வாக்குகளை பெற சாதி அரசியல் செய்தது யார்? என்று மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தோல்விகள் கொடுக்கும் படிப்பினைகளும், அனுபவங்களும் மகத்தானவை. அவை தான் அகங்காரம் கொண்டு தவறான பாதையில் செல்லும் மனிதர்களுக்கு எதார்த்தத்தை புரிய வைத்து சரியான திசையில் பயணிக்க வழிகாட்டும். ஆனால் விக்கிரவாண்டி தேர்தல் படுதோல்வி குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள கருத்துகள் அவர் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. தமிழ்நாட்டு அரசியல் சூழலையும், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் களத்தையும் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வரும் அனைவருக்கும் சாதி உணர்வை திட்டமிட்டு கிளப்பிய சந்தர்ப்பவாதிகள் யார்? என்பது நன்றாக தெரியும்.

1957-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற 15 தொகுதிகளில் 14 இடங்களும், 1962-ம் ஆண்டு தி.மு.க. வென்ற 48 இடங்களில் 39 இடங்களும் வன்னியர்கள் பூமியான வட தமிழ்நாட்டிலிருந்து கிடைத்தவை. அதன் பிறகும் கூட பல தேர்தல்களில் தி.மு.க.வை தூக்கிப் பிடித்தவை வன்னியர் பூமி தான். இதற்கெல்லாம் கைமாறாக வன்னியர்களுக்கு தி.மு.க. செய்தது துரோகம் மட்டும் தான். இவ்வளவுக்கு பிறகும் வன்னிய மக்களின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் செயல்படும் போது, அதை தட்டி கேட்காமல் என்னால் எப்படி இருக்க முடியும்? அந்த வகையில் கடமையை தான் நான் செய்தேன்.

விழுப்புரம் உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் பெரும்பான்மை வன்னிய சமுதாயத்தினர் தி.மு.க.வில் மாவட்ட அளவிலான பதவிகளுக்கு வந்துவிடக்கூடாது என்று தமது துதிபாடிகள் மூலம் அடக்கி வைத்திருக்கும் மு.க.ஸ்டா லின், திடீரென வன்னிய காவலன் வேடமிட்டு வந்தால் அதை ரசிப்பதற்கு இது நாடகம் அல்ல, அரசியல். இவ்வாறாக ஒவ்வொரு கட்டத்திலும் வன்னியர்களின் வாக்குகளை பெறுவதற்காக மு.க.ஸ்டாலின் செய்தது சாதி அரசியலா? அதை முறியடிக்க பா.ம.க. செய்தது சாதி அரசியலா? என்பதை அரசியல் வல்லுனர்கள் அறிவார்கள்.

போர்த்தொழில் புரியும் மக்கள் வியக்கத்தக்க வீரனுக்குத் தான் மகுடம் சூட்டுவார்கள், நயவஞ்சகனை நெருங்கக்கூட விடமாட்டார்கள். விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் வீரன் யார்? நயவஞ்சகர்கள் யார்? என்பதை அங்குள்ள மக்கள் நன்றாக அறிந்திருந்ததால் தான் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். விக்கிரவாண்டியில் சாதி அரசியல் என்றால், நாங்குநேரியில் சாதியுடன் மத அரசியலையும் சேர்த்து செய்து மக்களிடம் பிளவை ஏற்படுத்தி வெற்றி பெற மு.க.ஸ்டாலின் முயன்றார். ஆனால் அந்த தொகுதி மக்களும் மு.க.ஸ்டாலினின் தீய நோக்கத்தை உணர்ந்து தோல்வியை பரிசாக அளித்திருக்கின்றனர்.

தி.மு.க.வில் உள்ள வெள்ளை மனம் படைத்த வன்னியர்களும் மொத்தமாக சுரண்டப்படுவதற்கு முன்பாக விழித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடையவேண்டும். இதற்கெல்லாம் மேலாக இனியாவது ஏமாற்றும் அரசியலை கைவிட்டு, அறம் சார்ந்த அரசியல் செய்ய மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story