அரசின் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து தற்போது வரை குழந்தையை மீட்க போராடி வருகின்றன; அமைச்சர் விஜயபாஸ்கர்

அரசின் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து தற்போது வரை சிறுவனை மீட்க போராடி வருகின்றன என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
திருச்சி,
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் மகன் சுர்ஜித் வில்சன் (வயது 2). வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து 15 மணிநேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.
குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன.
இதனிடையே, அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கண்காணிப்பு கேமரா மூலம் குழந்தையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது என கூறினார்.
அவர் தொடர்ந்து, 70, 80 அடியில் இருந்தாலும் குழந்தை மூச்சுவிடும் சத்தம் கேட்டது. ஆனால், காலை 5.30 மணிக்கு பிறகு, குழந்தை மூச்சுவிடுவதை கண்டறிய முடியவில்லை. உடல் நிலையையும் கணிக்க முடியவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், மதுரை மணிகண்டன், டேனியல் மற்றும் அரசின் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து தற்போது வரை குழந்தையை மீட்க போராடி வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story