சுர்ஜித்தை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைவில் மீட்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்


சுர்ஜித்தை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைவில் மீட்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 26 Oct 2019 8:38 AM GMT (Updated: 2019-10-26T14:08:49+05:30)

சுர்ஜித்தை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைவில் மீட்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

திருச்சி ,

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 26 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  குழந்தையை மீட்க தொடர்ந்து 20  மணி நேரமாக 6க்கும் மேற்பட்ட குழுவினர் போராடி வருகின்றனர்.ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சுர்ஜித்தை மீட்க அரக்கோணத்தில்  இருந்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் நடுக்காட்டுப்பட்டிக்கு வருகை தந்துள்ளனர்.

சுர்ஜித்தை மீட்க நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்தில் பணிபுரியும் மீட்புக் குழுவினர், அதிநவீன கருவியுடன் வந்து உள்ளனர்.

தகவல் அறிந்து மாநில அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், என்.நடராஜன் மற்றும் எஸ்.வளர்மதி, மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எஸ்பி ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றனர்.

சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

குழந்தையை எப்படியாவது பத்திரமாகவும், உயிருடனும் மீட்க வேண்டும் என்று தமிழகம் மட்டுமல்லாமல், உலக முழுவதும் ஆதரவு குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அந்த குழந்தைக்காக அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டுமென நாகூர் தர்காவில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

சிறுவனை மீட்கும் பகுதியில் லேசான மழை பெய்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. ஆழ்துளை கிணறு உள்ள பகுதியில் மழைநீர் உள்ளே செல்லாமல் தார்பாய் கொண்டு மூடி உள்ளனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சிறுவன் சுர்ஜித்தின் உடல்நிலை சற்று கவலைக்குரிய நிலையில்தான் உள்ளது.  சுர்ஜித்தை மீட்பு குழுவினர் விரைவில் மீட்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.   குழந்தையை மீட்கும் முயற்சியில் 70 பேர் ஈடுபட்டு வருகின்றனர் என கூறினார்.

Next Story