” மாசு இல்லா தீபாவளி மானிட வாழ்வில் மகிழ்ச்சி” அரசின் நேரக்கட்டுப்பாட்டை விட கட்டுப்பாடே மாசுவை குறைக்கும்


” மாசு இல்லா தீபாவளி மானிட வாழ்வில் மகிழ்ச்சி” அரசின் நேரக்கட்டுப்பாட்டை விட கட்டுப்பாடே மாசுவை குறைக்கும்
x
தினத்தந்தி 26 Oct 2019 5:16 PM IST (Updated: 26 Oct 2019 5:16 PM IST)
t-max-icont-min-icon

அரசின் நேரக்கட்டுப்பாட்டை விட கட்டுப்பாடே மாசுவை குறைக்கும். மாசு இல்லா தீபாவளி கொண்டாடி மானிட வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவோம்.

சென்னை,

தீபாவளி சமயத்தில் உருவாகிற மாசு அளவை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடும். அவ்வாறு கணக்கிடுகையில், 2018-ம் ஆண்டு காற்று மற்றும் ஒலி மாசு 25 சதவீதம்  வரை குறைந்துள்ளது. சென்னையில், காற்று மாசு 65 குறியீடாக பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பட்டாசு வெடிப்பதற்காகக் கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததற்குப் பிறகு, மக்கள் மத்தியில் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் மாசு மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு  தீபாவளிப் பண்டிகையன்று இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அப்போது, விதிகளை மீறியதாக சுமார் 700 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் சிறுவர்களும் அடக்கம். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 135 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

2017ம் ஆண்டை காட்டிலும் 2018ம்  ஆண்டு தீபாவளி பட்டாசுகளால் தீ விபத்துகள் பெரும் அளவு குறைந்துள்ளன. சென்னையில் 46 தீ விபத்துகள் மட்டுமே நடந்தன. இவை அனைத்தும் சிறிய அளவிலான தீ விபத்துகள் என தீயணைப்பு துறையினர் தெரிவித்து இருந்தனர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் காற்று, ஒலி மாசு கணக்கிடப்படுகிறது. நாளை  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளிக்கு முன்னர் ஒருநாள், தீபாவளிக்கு பின் 2 நாட்கள் என காற்று மாசு ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பண்டிகைக்கு முன்னும், பின்னும் மாசு கணக்கிட  சென்னையில் 5 இடங்களும்  தமிழகத்தில் 15  நகரங்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

குடியிருப்பு பகுதிகளில் ஒலி அளவு காலை 55 டெசிபல், இரவில் 45 டெசிபல் மட்டுமே இருக்க வேண்டும். அமைதியான சூழல் நிலவும் பகுதிகளில் காலையில் 50 டெசிபல், இரவில் 40 டெசிபல் அளவில் ஒலி மாசு இருக்க வேண்டும். வர்த்தக பகுதிகளில் காலையில் 65 டெசிபல், மாலையில் 55 டெசிபல் அளவில் மட்டுமே ஒலி அளவு இருக்க வேண்டும். 

சென்னையில் தீபாவளி தினத்தன்று வெடிக்கப்படும் பட்டாசின் காரணமாக ஏற்படும் ஒலி மாசு கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்தும், காற்றின் மாசு குறைந்தும் உள்ளது.

2017ம் ஆண்டு 78 டெசிபல்லாக இருந்த ஒலி மாசு, 2018 ம் ஆண்டு 89 டெசிபல்லாக அதிகரித்து உள்ளது.   2017ம் அண்டு  777 பி.பி.எம். ஆக இருந்த காற்றின் மாசு, 114 பி.பி.எம். ஆக குறைந்து  இருந்தது. சுப்ரீம் கோர்ட்டால்  அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச காற்றுமாசு அளவு 100 பி.பி.எம். என கூறி உள்ளது.

Next Story