100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தின் கை தெரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன


100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தின் கை தெரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன
x
தினத்தந்தி 26 Oct 2019 4:14 PM GMT (Updated: 26 Oct 2019 4:16 PM GMT)

மீட்பு பணி நடைபெற்று வரும் இடத்தில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது

திருச்சி,

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர் 70 அடி ஆழத்துக்குச் சென்ற குழந்தை சுர்ஜித், தற்போது 100 அடிக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குழந்தை  ஆழ்துளை கிணற்றில் சிக்கி 28 மணி நேரம் கடந்துவிட்டது. குழந்தையை மீட்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 3 மீட்டர் தொலைவில்  1 மீட்டர் அகலத்திற்கு 90  அடிக்கு  மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவரும் நிலையில், மீட்புப்பணி நடைபெறும் இடத்தில் லேசான மழை பெய்து வருகிறது.  இதற்கிடையே, 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தின் கை தெரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குழந்தை சுர்ஜித் மேற்கொண்டு கீழே சென்றுவிடாத பிடி, குழந்தையின் கை ஏர் லாக் மூலம் இறுக்கமாக பிடிக்கப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டி  மீட்க தொடங்கும் போது,  அதிர்வில் குழந்தை சுர்ஜித் 100 அடிக்கும் கீழே சென்றுவிடாத வகையில் கை ஏர்லாக் மூலம் கை பிடிக்கப்பட்டுள்ளது. 


Next Story