வக்கீல்கள் நாட்டின் நலனுக்கு விரோதமாக செயல்பட கூடாது பொறுப்பு தலைமை நீதிபதி அறிவுரை


வக்கீல்கள் நாட்டின் நலனுக்கு விரோதமாக செயல்பட கூடாது பொறுப்பு தலைமை நீதிபதி அறிவுரை
x
தினத்தந்தி 26 Oct 2019 11:37 PM GMT (Updated: 2019-10-27T05:07:09+05:30)

நாட்டின் நலனுக்கு விரோதமாக செயல்பட கூடாது என்று புதிய வக்கீல்களுக்கு சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி அறிவுரை வழங்கினார்.

சென்னை,

சட்டப்படிப்பை முடித்த சுமார் 500 சட்ட மாணவர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்துள்ளனர். இவர்களது பதவி ஏற்பு நிகழ்ச்சி பார் கவுன்சில் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மூத்த வக்கீல் கிருஷ்ணசாமி முன்மொழிந்தார். பார் கவுன்சில் துணை தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். பதிவுக்குழு தலைவர் கே.பாலு உறுதிமொழி வாசிக்க புதிய வக்கீல்கள் அதனை வாசித்து பதவி ஏற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத்கோத்தாரி, சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் பராசரன், பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், அகில இந்திய பார் கவுன்சில் இணை தலைவர் எஸ்.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி பேசும்போது, “புதிய வக்கீல்களில் பெண்களும் அதிகளவில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கடின உழைப்பு, நேர்மை, பணிவு, மனிதாபிமானம் ஆகிய குணங்கள் இருந்தால் வக்கீல் தொழிலில் வெற்றிபெறலாம். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் வக்கீல்கள், நாட்டின் நலனுக்கு விரோதமாக செயல்படக் கூடாது” என்று அறிவுரை வழங்கினார்.

மூத்த வக்கீல் பராசரன் பேசும்போது, “இப்போது பிற மாநில ஐகோர்ட்டு தீர்ப்புகளை செல்போனிலேயே படிக்கும் வசதிகள் வந்துவிட்டது. வக்கீல்கள் அந்த தீர்ப்பு விவரங்கள் அனைத்தையும் படித்து, நினைவில் வைத்திருக்க வேண்டும். 92 வயது ஆனாலும் இன்றும் தினமும் நான் சட்டங்களையும், பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளையும் படித்து வருகிறேன்” என்றார்.

Next Story