தமிழகத்தில் சர்க்கரை தொழிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் நிர்மலா சீதாராமனுக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்


தமிழகத்தில் சர்க்கரை தொழிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் நிர்மலா சீதாராமனுக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்
x
தினத்தந்தி 27 Oct 2019 5:12 AM IST (Updated: 27 Oct 2019 5:12 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சர்க்கரை தொழிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நிர்மலா சீதாராமனுக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சென்னையில் கடந்த மாதம் 10-ந்தேதி தமிழக அரசின் பிரதிநிதிகள், ‘சிஸ்மா’ (தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம்) உறுப்பினர்கள், கரும்பு சாகுபடியாளர்கள் சர்க்கரை தொழில் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தை நடத்தியதற்கு, நீங்கள் (நிர்மலா சீதாராமன்) மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இதன் மூலம் கரும்பு உற்பத்தியாளர்களுக்கும், சர்க்கரை தொழிலுக்கும் புதிய நம்பிக்கை கிடைத்திருக்கிறது.

நீங்கள் தெரிவித்த ஆலோசனையின்படி சென்னையில் கடந்த மாதம் 24-ந்தேதி மத்திய அரசு மற்றும் தமிழக அரசு பிரதிநிதிகள், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள், ‘சிஸ்மா’ சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் தமிகத்தில் சர்க்கரை தொழில் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நெருக்கடியில் இருந்து சர்க்கரை தொழிலை நிவர்த்தி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது.

அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சர்க்கரை ஆலைகளை சீரமைக்கும் விதத்தில் அவற்றின் கடன் பிரச்சினைகள் குறித்து சென்னையில் கடந்த மாதம் 30-ந்தேதி சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் தமிழக அரசு மற்றும் வங்கி அதிகாரிகளை உள்ளடக்கிய ‘சர்க்கரை ஆலைகள் சீரமைப்பு குழு’ அமைக்க முடிவு எடுக் கப்பட்டது. மேலும் வங்கிகளுக்கு, சர்க்கரை ஆலைகள் கொடுக்கவேண்டிய கடன் தொகைகளை திருத்தி அமைப்பதற்கான வழிமுறைகளை கண்டறியவும் முடிவு எடுக்கப்பட்டது.

தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் மற்றும் இந்த ஆண்டு சராசரி அளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் நடப்பு ஆண்டு கரும்பு சாகுபடி அளவு அதிகரிக்கும். இதனால் சர்க்கரை ஆலைகள் உற்பத்தி திறன் அளவை மேம்படுத்தமுடியும். தமிழக சர்க்கரை தொழிலின் மொத்த உற்பத்தி திறன் 2020-21-ல் 45 சதவீதத்தில் இருந்து 50 சதவீதத்துக்கும் குறையாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சர்க்கரை ஆலைகள் வலுவான நிலையை அடையும்.

தமிழகத்தில் சர்க்கரை தொழிலை சீரமைக்க சில நடவடிக்கைகள் அவசியமாகிறது. அதன் விவரம் வருமாறு:-

* வங்கிகள், நிதி நிறுவனங்களில் இருந்து சர்க்கரை தொழிற்சாலைகள் பெற்ற கடன்களை திருத்தி அமைக்கவேண்டும். இதேபோல தனியார் மற்றும் கூட்டுறவு ஆலைகள் வாங்கியிருக்கும் சர்க்கரை மேம்பாட்டு நிதியில் (எஸ்.டி.எப்.) இருந்து பெறப்பட்ட கடன் களையும் திருத்தியமைக்கவேண்டும்.

* சர்க்கரை ஆலைகளின் நிதி பணப்புழக்கத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு நடவடிக்கையாக தமிழக ஆலைகளுக்கு கூடுதல் சர்க்கரையை மத்திய அரசு வழங்கவேண்டும்.

* ஏற்கனவே வாங்கியிருக்கும் கடன்களை திருப்பி செலுத்தாவிட்டாலும், கரும்பு விவசாயிகளுக்கு கடன்கள் வழங்கவேண்டும் என்று வங்கி களை அறிவுறுத்தவேண்டும்.

தமிழகத்தில் சுமார் 4 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதத்தில், தமிழக சர்க்கரை தொழிலை சீரமைப்பது தொடர்பாக மத்திய அரசு எங்களுக்கு ஆதரவான உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும். மேலும் தொடர்ந்து ஆதரவு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story