தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு மீண்டும் விமான சேவை தொடக்கம்


தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு மீண்டும் விமான சேவை தொடக்கம்
x
தினத்தந்தி 28 Oct 2019 10:53 PM GMT (Updated: 28 Oct 2019 10:53 PM GMT)

தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் விமானம் இயக்கப்பட்டது. பின்னர் அந்த விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு தனியார் விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த விமானம் தினமும் அதிகாலை 5.25 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு காலை 7.10 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு 9.30 மணிக்கு பெங்களூருவை சென்றடையும்.

இந்த விமானம் நேற்று முன்தினம் முதல் இயக்கப்பட்டது. தூத்துக்குடிக்கு வந்த விமானத்தின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணிகளுக்கு பூக்கள் கொடுத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நடந்த விழாவுக்கு விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி கேக் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் விமான சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பயணிகளை வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் விமான நிலைய மேலாளர் ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்..

பின்னர் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு தமிழக அரசிடம் இருந்து நிலம் பெறப்பட்டு, விமான நிலைய ஆணைய தலைவரிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது. அனுமதி பெறப்பட்டதும் விரிவாக்க பணிகள் தொடங்கப்படும். இந்த பணிகள் முடிவடைந்த பிறகு பெரிய விமானங்கள் வந்து செல்ல முடியும். விமான நிலையத்தின் ஓடுதளம் விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து இரவு நேர விமான சேவையும் தொடங்கப்படும் என்றார்.

Next Story