ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட மருத்துவர்களை அனுமதிக்க வேண்டாம் - பீலா ராஜேஷ்


ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட மருத்துவர்களை அனுமதிக்க வேண்டாம் - பீலா ராஜேஷ்
x
தினத்தந்தி 29 Oct 2019 12:09 PM GMT (Updated: 29 Oct 2019 12:09 PM GMT)

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட மருத்துவர்களை அனுமதிக்க வேண்டாம் என டிஜிபிக்கு சுகாதார துறை செயலர் பீலா ராஜேஷ் கடிதம் அனுப்பி உள்ளார்.

சென்னை

அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தரவேண்டும், மேற்படிப்பு அரசு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு வெளிப்படையாக நடத்த வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள், வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 25ம் தேதி துவங்கிய போராட்டமானது 5-வது நாளாக நீடித்து வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நுழைவாயில் முன்பு 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டிஜிபிக்கு பீலா ராஜேஷ் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் 25ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் கூறியதாகவும், ஆனால், அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர்கள், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சாமியானா அமைத்து போராட்டம் நடத்த அனுதிக்க கூடாது என்றும், நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடாமல் பணியாற்றும் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு தமிழக டி.ஜி.பி திரிபாதிக்கு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Next Story