நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் தச்சு தொழிலாளியிடம் விசாரணை


நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் தச்சு தொழிலாளியிடம் விசாரணை
x
தினத்தந்தி 29 Oct 2019 9:19 PM GMT (Updated: 29 Oct 2019 9:19 PM GMT)

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புகாரில் தச்சு தொழிலாளியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

சென்னை,

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த சனிக்கிழமை செல்போனில் பேசிய மர்மநபர் ஒருவர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அந்த வெடிகுண்டு சற்றுநேரத்தில் வெடித்து சிதறப்போகிறது எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

சற்றுநேரத்தில் மீண்டும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய அதே நபர் சென்னை எழிலக கட்டிடத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடித்து சிதறப்போகிறது எனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் வீட்டிலும், எழிலக கட்டிடத்திலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். நடிகர் விஜய் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

போலீசார் விசாரணை

விசாரணையில் அந்த நபர் ஒரே செல்போன் எண்ணில் இருந்து பேசி நடிகர் விஜய் வீட்டுக்கும், எழிலக கட்டிடத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

அவர் பேசிய செல்போன் எண்ணை வைத்து அண்ணாசதுக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த செல்போன் சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த மதிவாணன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனையடுத்து சென்னை அண்ணாசாலையில் உள்ள கம்பெனியில் தச்சு வேலை செய்து வரும் மதிவாணனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

மர்ம நபர் யார்?

கடந்த சனிக்கிழமை தனது கம்பெனி அருகே நடந்து சென்றதாகவும், அப்போது எதிரில் வந்த மர்மநபர் தனது செல்போனை வாங்கி பேசியதாகவும், அவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசியிருக்க வேண்டும் என்றும், ஆனால் அவரை யார்? என்று தெரியாது என்றும் மதிவாணன் தெரிவித்தார்.

ஆனால் அந்த மர்மநபர் மனநோயாளி போல் காணப்பட்டதாக மதிவாணன் போலீசாரிடம் கூறினார். இதை தொடர்ந்து போலீசார் அவரை விடுவித்துவிட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story