கனமழை: மாநிலப் பேரிடர் மீட்புத்துறை ஒவ்வொரு மாவட்டத்திலும் தயார் நிலையில் உள்ளது-வருவாய் நிர்வாக ஆணையர்


கனமழை: மாநிலப் பேரிடர் மீட்புத்துறை ஒவ்வொரு மாவட்டத்திலும் தயார் நிலையில் உள்ளது-வருவாய் நிர்வாக ஆணையர்
x
தினத்தந்தி 30 Oct 2019 8:04 AM GMT (Updated: 30 Oct 2019 8:04 AM GMT)

தொடரும் கனமழையால் மாநிலப் பேரிடர் மீட்புத்துறை ஒவ்வொரு மாவட்டத்திலும் தயார் நிலையில் உள்ளது-வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

சென்னை

வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னை, எழிலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

காற்றழுத்தத் தாழ்வால் தமிழ்நாட்டின் தென்பகுதியில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வடமாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

முதல்வரின் உத்தரவுப்படி, அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் இருக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை எச்சரிக்கையின்படி, கன்னியாகுமரியில் ஆழ்கடலுக்குச் சென்ற 763 படகுகள் பாதுகாப்பாக கரைக்கு வந்துள்ளன. மீதியுள்ள 7 படகுகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தென்பகுதியில் ஆழ்கடலுக்குச் சென்ற 562 படகுகள் கரைக்கு வந்துள்ளன. மீதமுள்ள 3 படகுகளுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

தேவைக்கேற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், கொடைக்கானல், மதுரை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

மாநிலப் பேரிடர் மீட்புத்துறை ஒவ்வொரு மாவட்டத்திலும் தயார் நிலையில் உள்ளது. வருவாய்த் துறை அமைச்சர் தொடர் கண்காணிப்பில் உள்ளார். மாநில கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என கூறினார்.

Next Story