சுஜித் விவகாரம்: கோபத்தைத் தவிர்க்க வேண்டும், முதலமைச்சர் பழனிசாமி உரிய பதில் அளிக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின்


சுஜித் விவகாரம்: கோபத்தைத் தவிர்க்க வேண்டும், முதலமைச்சர் பழனிசாமி உரிய பதில் அளிக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 30 Oct 2019 8:08 AM GMT (Updated: 30 Oct 2019 8:08 AM GMT)

குழந்தை சுஜித் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய பதில் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்பதில் ஏன் அதிமுக அரசு மெத்தனம் காட்டியது என பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நான் கேள்வி கேட்டால் முதலமைச்சர் பழனிசாமி கோபப்படுகிறார்.

"ஸ்டாலின் என்ன விஞ்ஞானியா?" என்று அர்த்தமற்ற கேள்வியைக் கேட்கிறார். தனது தோல்வியை மறைக்க தவியாய்த் தவிக்கிறார். நான் ஒன்றும் ஒரு விஞ்ஞானியின் கோணத்தில் கேள்வி கேட்கவில்லை. சாதாரண அறிவு கொண்ட சாமானியனாகத்தான் என்னுள் எழுந்த சந்தேகத்தைக் கேட்டேன்.

அரசாங்க இயந்திரம் முழுமையாகச் செயல்படவில்லை, இராணுவ உதவியை விரைந்து பெற்றிருக்க வேண்டும் என்ற எனது கருத்தை - ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள - தாங்கிக்கொள்ள முடியாத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேட்டியில், குழந்தையை இழந்த சோகத்தை விட, என் மீதான குரோதம் தான் மேலோங்கி வெளிப்படுகிறது. 

2009 ல் ஸ்டாலின் ராணுவத்தை வரவழைத்தாரா எனக் கேட்கிறார். அப்போது திருச்சி - பெங்களூருவில் இருந்து துணை ராணுவப் படைகள் வரவழைக்கப்பட்டது என்பது கூடத் தெரியாமல் பேசும் முதலமைச்சர், 'ஆறுவது சினம்' என்பதுணர்ந்து கோபத்தைத் தவிர்க்க வேண்டும் என்பது என் அறிவுரை அல்ல; அன்பு வேண்டுகோள்!

சுஜித் விவகாரத்தில் யார் மீதும் சினம் கொள்ளாமல் மனசாட்சியுடன் முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். மக்கள், நடுநிலையாளர்களின் மனங்களில் உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை ஹெலிகாப்டரில் அழைத்து வராதது ஏன்?  5 மணி நேரத்தில் வர வேண்டிய மீட்புப்படை சம்பவ இடத்திற்கு வர 12 மணி நேரம் எடுத்துக்கொண்டது ஏன்?  ஆழ்துளை கிணறு மீட்பு பணியை செய்யாத தேசிய பேரிடர் மீட்பு படையை அழைத்ததற்கு அரசின் விளக்கம் என்ன? 

அனைத்தும் பொய் என்று ஒரே போடாக போட்டு விட்டு கடந்து போக முயற்சி செய்யக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story