அணைகள், ஏரிகள், குளங்களின் நீரின் அளவை 24 மணி நேரமும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு


அணைகள், ஏரிகள், குளங்களின் நீரின் அளவை 24 மணி நேரமும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
x

அணைகள், ஏரிகள், குளங்களின் நீரின் அளவை 24 மணி நேரமும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், ஏரி , குளங்களில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை பகுதியில் திருமுடிவாக்கம் சாலையில் 2 கோடியே 63 லட்சம் செலவில் அடையார் ஆற்றில்  பாலம்  கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தற்காலிக தரைப்பாலம் ஒன்று போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று பெய்த மழையில் தரைப்பாலம் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பலரும் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து மழை பெய்வதால் தரைப்பாலத்தை சீரமைக்க முடியாத நிலை உள்ளதாகவும், மாற்றுப்பாதையை மக்கள் பயன்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணை நிரம்பி வருகிறது. இதனையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 67.5 அடியை எட்டியது. இதனையடுத்து ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் மருதாநிதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 324 ஏரிகளில் 23 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் மேலும் பல ஏரிகள் நிரம்பவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,  தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்களின் நீரின் அளவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று  மாவட்ட செயற்பொறியாளர்களுக்கு, பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கு உடனுக்குடன் தகவல்களை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story