ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு இல்லை ஐகோர்ட்டில், தமிழக அரசு விளக்கம்


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு இல்லை ஐகோர்ட்டில், தமிழக அரசு விளக்கம்
x
தினத்தந்தி 30 Oct 2019 11:37 PM GMT (Updated: 30 Oct 2019 11:37 PM GMT)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் பட்டுவாடா செய்ததாக தமிழக அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டு எழுந்தது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் இதற்கான ஆதாரங்கள் சிக்கின. அதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல அமைச்சர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு, வருமான வரித்துறை ஆணையர் கடிதம் எழுதினார். இதன்படி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அதேநேரம், பணம் பட்டுவாடா குறித்து ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், குற்றவாளிகளின் பெயரை குறிப்பிடாமல், அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இன்ஸ்பெக்டர் பதில்

இதையடுத்து இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வைரக்கண்ணன், தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட மருதுகணேஷ் ஆகியோர் தனித்தனியாக பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில், அபிராமபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நரசிம்மன் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த வழக்கை ரத்து செய்தது.

இந்த நிலையில், வைரக்கண்ணன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘தற்போது ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பாக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. எனவே, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை’ என்று கூறப்பட்டு இருந்தது.

மாற்றம் இல்லை

அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், ‘பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கை தனி நீதிபதி ரத்து செய்து விட்டார். இவரது உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் எண்ணம் உள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என்று தமிழக அரசு ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டது. அந்த முடிவில் மாற்றம் இல்லை’ என்று கூறினார்.

போலீசார் மறைத்தனர்

மனுதாரர் மருதுகணேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘பணம் பட்டுவாடா வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டுள்ளனர். அபிராமபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ. விசாரணை கேட்டு தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகள், டிவிசன் பெஞ்ச் விசாரணையில் உள்ளது என்ற தகவலை போலீசார் திட்டமிட்டு மறைத்து, உத்தரவு பெற்றுள்ளனர். எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என வாதிட்டார்.

இதையடுத்து விசாரணையை வருகிற நவம்பர் 7-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Next Story