மாநில செய்திகள்

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன?தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை + "||" + Director of Elementary Education Circular

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன?தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன?தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
நடப்பு கல்வியாண்டு முதல் நடைபெற உள்ள 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சென்னை,

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தொடக் கக்கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-20-ம் கல்வியாண்டில் (நடப்பு கல்வியாண்டு) இருந்து கல்வியாண்டின் இறுதியில் பொதுத்தேர்வு நடத்துவதற்கு அரசு ஆணையிட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் 2019-20-ம் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட வேண்டும். இந்த தேர்வுக்குழு பொதுத்தேர்வு நடத்தும் பணிகளை மேற்கொள்ளும். பொதுத்தேர்வு எழுதும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளும் தேர்வு மையம் அமைக்க வேண்டும்.

கால அட்டவணை

தேர்வு கால அட்டவணை, அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் வெளியிடப்படும். தற்போது நடைமுறையில் உள்ள வளர்அறி மதிப்பீடு மற்றும் தொகுத்தறி மதிப்பீடு முறையில் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும். இதில் வளர்அறி மதிப்பீடு மூலம் 40 மதிப்பெண்களும், தொகுத்தறி மதிப்பீடு மூலம் 60 மதிப்பெண்களும் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தேர்வு நடக்கும்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட சிறுபான்மை பயிற்று மொழியில் மாணவர்களுக்கு அவர்களுடைய பயிற்று மொழிகளிலேயே தேர்வு எழுதிடும் வகையில் அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் பொதுத்தேர்வுக்குரிய வினாத்தாள்களும், விடைக்குறிப்புகளும் தயார் செய்யப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விடைத்தாள்கள்

வினாத்தாள்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அச்சு பிரதி எடுத்து அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள குறுவள மையங்களின் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் குறுவள மையம் அமைந்துள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும். இந்த குறுவள மையமே வினாத்தாள் கட்டுக்காப்பு மையமாக செயல்படும்.

விடைத்தாள்கள் குறுவள மைய அளவிலேயே அனைத்து பாடங்களுக்கான மதிப்பீட்டு பணி நடைபெற வேண்டும். விடைத்தாள்களை 5, 8-ம் வகுப்பு போதிக்கும் அந்தந்த பாட ஆசிரியர்களை கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும்.

தேர்ச்சியை நிறுத்தக்கூடாது

பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மதிப்பெண் பட்டியல்களில் இருந்து ஒவ்வொரு மாணவருக்குரிய மதிப்பெண்ணை பாடவாரியாக மதிப்பெண் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். இந்த விவரங்கள், கல்வி மேலாண்மை தகவல் முறைமை(இ.எம்.ஐ.எஸ்.) இணையதளத்தில் அந்தந்த மாணவருக்குரிய சுயவிவரங்கள் பட்டியலில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்ய வேண்டும்

இதற்கிடையே, 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தமிழ் நாடு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும். எனவே கல்வி சீர்திருத்தம் என்ற பெயரில் குழந்தைகளின் மனநலத்தை கெடுத்திட வேண்டாம். குழந்தைகளின் நலன்கருதி, முதல்- அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்திட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.