திருத்தணியில் 19 செ.மீ. மழை கொட்டியது கல்பாக்கம் அருகே தரைப்பாலம் மூழ்கியது


திருத்தணியில் 19 செ.மீ. மழை கொட்டியது கல்பாக்கம் அருகே தரைப்பாலம் மூழ்கியது
x
தினத்தந்தி 30 Oct 2019 11:46 PM GMT (Updated: 30 Oct 2019 11:46 PM GMT)

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 19 செ.மீ. மழை கொட்டியது. காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருத்தணியில் 19 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

ஆர்.கே.பேட்டை 151

பள்ளிபட்டு 75

திருவாலங்காடு 74

ஜமீன் கொரட்டூர் 72

செம்பரம்பாக்கம் 70.40

பூந்தமல்லி 70

சோழவரம் 66

பூண்டி 64

திருவள்ளூர் 56

தாமரைபாக்கம் 51

கும்மிடிப்பூண்டி 43

ஊத்துக்கோட்டை 43

செங்குன்றம் 33.40

பொன்னேரி 32

காஞ்சீபுரம் மாவட்டம்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கத்தை அடுத்த இளையனார்குப்பம் பகுதியில் பக்கிங்காம் கால்வாய் மீது இருந்த பெரிய பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெய்த பெருமழையில் சேதம் அடைந்தது. இதனையடுத்து அதே இடத்தில் புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் அரசு பஸ் உள்பட வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு வசதியாக புதிய பாலத்தையொட்டி தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர் மழையால் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் நேற்று காலை 6 மணி முதல் சென்னையில் இருந்து புதுச்சேரி மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் நின்றன. தகவலறிந்த கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் விரைந்து வந்து வாகனங்களை கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு வழியாக திருப்பி விட்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

ஸ்ரீபெரும்புதூர் 75.80

மாமல்லபுரம் 73.40

செய்யூர் 70

செங்கல்பட்டு 68

காஞ்சீபுரம் 62.40

தாம்பரம் 62.20

உத்திரமேரூர் 56

மதுராந்தகம் 55

மீனம்பாக்கம் 52.20

திருப்போரூர் 47.20

திருக்கழுக்குன்றம் 37.50

வாலாஜாபாத் 14

Next Story