சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கோயம்பேடு வியாபாரிகள் பாதிப்பு


சென்னை  மற்றும் புறநகர்  பகுதிகளில்  பலத்த  மழை கோயம்பேடு வியாபாரிகள்  பாதிப்பு
x
தினத்தந்தி 30 Oct 2019 11:50 PM GMT (Updated: 31 Oct 2019 12:11 AM GMT)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் கோயம்பேடு வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

சென்னை,

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு வரை விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

மழை காரணமாக நேற்று காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு பணிக்கு செல்வோர் சிரமப்பட்டனர். சென்னையின் மைய பகுதிகளான சென்டிரல், எழும்பூர், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் மற்றும் தியாகராயநகர், கோயம்பேடு, வில்லிவாக்கம், கொடுங்கையூர், மாதவரம், மூலக்கடை, அடையாறு, திருவான்மியூர் என சென்னை முழுவதும் நேற்றும் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது.

இதனால் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நின்றது. ஒரு சில தாழ்வான பகுதிகளில் அதிக அளவில் மழைநீர் தேங்கி இருந்தது. சில இடங்களில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

புறநகர் பகுதி

சென்னை புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, மீனம்பாக்கம், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது.

திருவொற்றியூர் கலைஞர்நகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஜீவன்லால் நகர் பகுதியில் சாலையில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. எர்ணாவூர் பிருந்தாவன் நகர் விஸ்தரிப்பு பகுதியில் ஆறுமுகம் உள்பட 3 பேரின் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

கோயம்பேடு வியாபாரிகள் பாதிப்பு

கோயம்பேடு பகுதியில் பெய்த மழை காரணமாக மார்க்கெட்டில் கடைகள் உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்களின் வருகையும் குறைந்தே காணப்பட்டது.

மழையால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகள் குறிப்பாக எளிதில் அழுகும் காய்கறிகளான வெள்ளரிக்காய், பூசணிக்காய், தடியங்காய், வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் கீரை வகைகள் அதிக அளவில் சேதம் அடைந்தன. இதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

வெங்காயம் விலை உயர்வு

இது குறித்து சத்யராஜ் என்ற வெங்காய வியாபாரி கூறும்போது, “நாசிக், பெல்லாரி பகுதிகளில் இருந்து அதிக அளவில் வெங்காயம் வருகிறது. தற்போது பெய்துவரும் மழையால் லாரிகளில் கொண்டுவரும் வெங்காயம் நனைந்து அழுகி போகிறது. ஒரு லாரியில் வரும் 15 அல்லது 16 டன் வெங்காயத்தில் 2 முதல் 3 டன் வரையிலான வெங்காயம் அழுகி சேதம் அடைகிறது. இதனால், ஒரு மூட்டைவெங்காயம் விலை ரூ.200 வரை அதிகரித்து உள்ளது” என்றார்.

கருவேப்பிலை வியாபாரி முருகன் கூறும்போது, “ஒரு கட்டு கருவேப்பிலை 120 முதல் 150 ரூபாய் வரை விற்பது வழக்கம். மழை காரணமாக மார்க்கெட்டுக்கு வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததால் 100 ரூபாய்க்கு வாங்கிய ஒரு கட்டு கருவேப்பிலையை 60 ரூபாய்க்கு விற்றோம்” என்றார்.

Next Story