தீவிர புயலாக மாறியது ‘மஹா’புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம்


தீவிர புயலாக மாறியது ‘மஹா’புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 31 Oct 2019 11:54 AM GMT (Updated: 31 Oct 2019 11:54 AM GMT)

லட்சத் தீவுகள் அருகே நிலைகொண்டிருந்த மஹா புயல், வலுப்பெற்று தீவிர புயலாக மாறியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் தென் மாவட்டங்களில் மழை தீவிரம் அடைந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிகபட்சமாக 19 சென்டி மீட்டர் மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கும், ஏரி, குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவி வந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று காலை திருவனந்தபுரத்துக்கு தென்மேற்கில் சுமார் 220 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருந்தது. 

பின்னர் அது மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மஹா’என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இது ஓமன் நாடு சூட்டிய பெயர் ஆகும்.  இந்த புயல் காரணமாக தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

லட்சத் தீவுகள் அருகே நிலைகொண்டிருந்த மஹா புயல், வலுப்பெற்று தீவிர புயலாக மாறியது. மஹா புயல் தற்போது அமிந்தி தீவுகளுக்கு வடகிழக்கே 90 கி.மீ. தொலைவிலும் , கோழிக்கோட்டிற்கு வடமேற்கே 330 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக லட்சத்தீவுகளில் அதி கனமழையும், கேரளா மற்றும் தமிழக மாவட்டங்களில் பரவலாக கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.  காற்றின் வேகம் 120 கி.மீட்டர் வரை இருக்கும் எனவும் நவம்பர் 4-ம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே அரபிக்கடலில் கியார் புயல் உருவாகியுள்ள நிலையில் நேற்று இரண்டாவதாக மஹா புயல் உருவானது குறிப்பிடத்தக்கது.

Next Story