இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தமிழக அதிகாரியுடன் ஆலோசனை வாக்காளர் சரிபார்க்கும் திட்டம் குறித்து கேட்டறிந்தார்


இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தமிழக அதிகாரியுடன் ஆலோசனை வாக்காளர் சரிபார்க்கும் திட்டம் குறித்து கேட்டறிந்தார்
x
தினத்தந்தி 31 Oct 2019 9:49 PM GMT (Updated: 31 Oct 2019 9:49 PM GMT)

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகுவுடன் ஆலோசனை நடத்தினார். வாக்காளர் சரிபார்க்கும் திட்டம், சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து அவர் கேட்டறிந்தார்.

சென்னை,

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, மூத்த துணை தேர்தல் கமிஷனர் சந்தீப் சக்சேனா ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுடன் வாக்காளர் சரிபார்க்கும் திட்டம், 2020-ம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்க திருத்தத்துக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து சென்னையில் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினர்.

இதில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், ராமநாதபுரம், சேலம், தேனி மற்றும் நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர். வாக்காளர் சரிபார்க்கும் திட்டம் தவிர்த்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு ஒற்றை படிவம் வழங்குவது தொடர்பான விவகாரங்கள் குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.

பணிக்குழு அமைப்பு

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தங்களுடைய கருத்துகள், ஆலோசனைகளை தலைமை தேர்தல் அதிகாரி மூலமாக அனுப்பவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

வாக்காளர் பட்டியல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து மேம்படுத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று சத்தியபிரத சாகுவை, சுனில் அரோரா அறிவுறுத்தினார்.

தமிழகத்துக்கு பாராட்டு

வாக்காளர்களை தேர்தலில் பங்கேற்க வைக்கும் திட்டத்தின் செயல்பாடுகளை தமிழகத்தில் சிறப்பாக செய்ததற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் பாராட்டினார். அந்த திட்டத்தின் அம்சங்களை மொழிபெயர்த்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புமாறும் உத்தரவிட்டார்.

இதேபோல வாக்காளர் சரிபார்ப்பு திட்டம், ஜி.பி.எஸ். தொழில்நுட்ப முறையில் வாகனங்களை கண்காணிக்கும் ‘கருடா’ திட்டம், எல்லைகளை வரையறுக்கும் புவியியல் தகவல் அமைப்பு முறையில் உருவாக்கப்பட்ட ‘செயலி’ (ஆப்) உள்ளிட்டவற்றால் தமிழகத்துக்கு இந்திய தலைமை தேர்தல் கமிஷனரிடம் இருந்து பாராட்டு கிடைத்தது.

Next Story