கோவை, நாகூர், காயல்பட்டினம், திருச்சி, இளையான்குடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து கோவை, நாகூர், காயல்பட்டினம், திருச்சி, இளையான்குடியில் 6 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கோவை,
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையன்று நடந்த குண்டுவெடிப்பில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள்
இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுடன் கோவையைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து கோவையில் கடந்த ஜூன் மாதத்தில் உக்கடம் அன்பு நகரை சேர்ந்த அசாருதீன் (வயது 32), போத்தனூர் அக்ரம் ஜிந்தா (26), தெற்கு உக்கடம் ஷேக் இதயத்துல்லா (29), இப்ராகிம் (26) மற்றும் போத்தனூர் சதாம் உசேன் (26), குனியமுத்தூர் அபுபக்கர் ஆகியோர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
2 பேர் கைது
இந்த சோதனையின்போது மடிக்கணினி, பென்டிரைவ், தோட்டாக்கள், சிம்கார்டுகள் செல்போன்கள் உள்பட ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 6 பேருக்கும், கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பினார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் 6 பேரும் கொச்சி சென்று ஆஜரானார்கள்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு இருப்பதும், அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் முகநூலில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து அசாருதீன், ஷேக் இதயத்துல்லா ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். மற்ற 4 பேரை திருப்பி அனுப்பினார்கள். கைதான 2 பேரையும் போலீசார் கொச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவையில் சோதனை
இந்த நிலையில் கொச்சி சிறையில் இருக்கும் அசாருதீன், ஷேக் இதயதுல்லா ஆகியோரை நேற்று முன்தினம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அதில் கோவையைச் சேர்ந்த 2 பேருக்கு தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த சமீர் (22), உக்கடம் லாரிப்பேட்டை அண்ணாநகரை சேர்ந்த சவுகர்தீன் (30) என்பது தெரியவந்தது.
இதையடுத்து கொச்சியில் இருந்து என்.ஐ.ஏ. போலீஸ் துணை சூப்பிரண்டு சாகுல் அமீது தலைமையில் அதிகாரிகள் நேற்று அதிகாலை கோவை வந்தனர். பின்னர் அவர்கள் கோவை மாநகர போலீசாருடன் சமீர், சவுகர்தீன் ஆகியோரின் வீடுகளுக்கு 2 பிரிவாக சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை காலை 10 மணி வரை நீடித்தது.
முகநூலில் தொடர்பு
சோதனையின்போது வீட்டிற்குள் இருந்தவர்கள் யாரையும் வெளியே விடவில்லை. இதேப்போல் வீடுகளுக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சோதனை முடிவில் அவர்கள் 2 பேருக்கும் கோவை ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு ஆஜரானார்கள். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது அவர்கள் வீடுகளில் இருந்து 2 செல்போன்கள், 2 மடிக்கணினிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. என்ஜினீயரிங் படித்துள்ள சமீர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சவுகர்தீன் கோவை உக்கடத்தில் சிறிய ஓட்டல் நடத்தி வருகிறார். இவர்கள் 2 பேரும் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் முகநூலில் தொடர்பு வைத்து இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாகூர்
இந்த நிலையில் நாகை மாவட்டம் நாகூரை அடுத்த சண்ணமங்கலம் சேவாபாரதி பகுதியைச் சேர்ந்த முகமது அஜ்மல் (22) என்பவரிடம் விசாரணை நடத்துவதற்காக நேற்று கேரள மாநிலம் கொச்சியில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாகூர் வந்தனர். அவர்களுடன் தமிழக போலீசார் 10-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.
முகமது அஜ்மல் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அவர் வீட்டில் இல்லை என்பதும், அவர் நாகூர் மியாத்தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கு சென்று உறவினர் வீட்டில் இருந்த முகமது அஜ்மலிடம் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து அவரிடம் அதிகாரிகள், நாகை போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி ‘சம்மன்’ அளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதன்படி முகமது அஜ்மல் நாகை போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அங்கு அவரிடம் சில நிமிடங்கள் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
காயல்பட்டினம்
அதுபோன்று தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கே.டி.எம். தெருவைச் சேர்ந்த ரிபாய்தீன் மகனான அபுல்ஹசன் சாதுலி (27) வீட்டில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று காலை 6 மணிக்கு அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அபுல்ஹசன் சாதுலி வீட்டில் இல்லை. வாடகை கார் ஓட்டி வரும் அவர், சென்னை சென்று இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். அவருடைய வீட்டில் நடத்திய சோதனையில் சில ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் என்னென்ன ஆவணங்களை கைப்பற்றினார்கள் என்பது தெரியவில்லை.
திருச்சி
இதேபோல் கேரளாவில் இருந்து போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார் தலைமையில் வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திருச்சி இனாம்குளத்தூர் ஆசாரித்தெருவை சேர்ந்த சாகுல்அமீது (28) என்பவரது வீட்டில் அதிரடியாக நுழைந்தனர். சாகுல்அமீது தனியார் பால் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் சோதனை தொடங்கியதும், வீட்டில் இருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
மேலும், வீட்டுக்குள் யாரும் வராதபடி தடுத்து நிறுத்தப்பட்டனர். வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், செல்போன்களை சோதனை செய்தனர். பின்னர் செல்போன், மடிக்கணினி மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். இந்த சோதனை நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை நடந்தது.
இளையான்குடி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த சிராஜூதீன் வீட்டிலும் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்தனர். வீட்டில் இருந்த அவருடைய செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், விசாரணைக்கு வரும்படி அவருக்கு சம்மன் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர். அவருடைய வீட்டிலும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் கோவை உள்பட 5 ஊர்களில் 6 பேரின் வீடுகளில் நேற்று ஒரே நாளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:-
முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
கோவை, நாகூர், காயல்பட்டினம், திருச்சி மற்றும் இளையான்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 பேர் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த 6 பேரும் இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய ஜக்ரான் ஹசீமுடன் முகநூலில் தொடர்பு வைத்து இருந்தனர். அத்துடன் இந்து இயக்க தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி, தமிழகத்தில் மத கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்ததாக கைதான நபர்களிடம் இந்த 6 பேரும் நெருங்கிய தொடர்பு வைத்து இருப்பதும் தெரியவந்து உள்ளது.
இதுதவிர தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் முகநூலில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை வைத்துத்தான் அவர்கள் 6 பேரின் வீடுகளிலும் அதிரடி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின்போது 2 மடிக்கணினிகள், 8 செல்போன்கள், 5 சிம்கார்டுகள், ஒரு மெமரி கார்டு மற்றும் 14 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஏற்கனவே கைதான நபர்களுக்கும், இந்த 6 பேருக்கும் எந்த வகையில் தொடர்பு இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story