மஞ்சளாறு அணையை நாளை முதல் 135 நாட்களுக்கு திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு


மஞ்சளாறு அணையை நாளை முதல் 135 நாட்களுக்கு திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 1 Nov 2019 2:15 PM IST (Updated: 1 Nov 2019 2:15 PM IST)
t-max-icont-min-icon

மஞ்சளாறு அணையை நாளை முதல் 135 நாட்களுக்கு திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு ஆகிய மொத்தம் 5259 ஏக்கர் நிலங்களுக்கு தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி கிராமத்தில் உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து 2.11.2019 முதல் 135 நாட்களுக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. 

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி கிராமத்தில் உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து 2.11.2019 முதல் 135 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டுகளுக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீரை திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு 3386 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு 1873 ஏக்கர் ஆக மொத்தம் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story