மாநில செய்திகள்

கீழடியில் அடுத்தக்கட்ட அகழாய்வு பணி ஜனவரி மாதம் தொடக்கம் அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல் + "||" + Keezhadi next step Excavation work Starting in January Minister K. Pandiyarajan Information

கீழடியில் அடுத்தக்கட்ட அகழாய்வு பணி ஜனவரி மாதம் தொடக்கம் அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

கீழடியில் அடுத்தக்கட்ட அகழாய்வு பணி ஜனவரி மாதம் தொடக்கம் அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்
கீழடியில் அடுத்தக்கட்ட அகழாய்வு பணி ஜனவரி மாதம் தொடங்குகிறது என்று அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.
சென்னை,

‘தமிழ்நாடு நாள்’ விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநில அளவிலான ஓவிய, சிற்ப கலைக்காட்சி தொடக்கவிழா மற்றும் 60 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது.


இந்த விழாவுக்கு தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தலைமை தாங்கி கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதில் கலை பண்பாட்டுத் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், டாக்டர் ஜெயலலிதா கவின் கலை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பிரமிளா குருமூர்த்தி, அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்ப கலை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜெ.ராஜேந்திரன், கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குனர் ச.சூர்யபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓவிய, சிற்ப கண்காட்சியில் கீழடி அகழாய்வு குறித்த புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்று இருந்தது. அதை அமைச்சர் க.பாண்டியராஜன் பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கலை பண்பாட்டுத்துறை சார்பில் இந்த கண்காட்சி 4 நாட்கள் இங்கு நடைபெறும். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைத்து அதற்கு அருகில் ஒரு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்படும்.

கீழடி, சிவகளை உள்பட 4 இடங்களில் ஆய்வு செய்ய மத்திய தொல்லியல் துறையிடம் இருந்து அனுமதி கிடைத்து இருக்கிறது. வருகிற ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் இதற்கான பணிகள் தொடங்க இருக்கிறது.

கீழடியில் நடத்தப்பட்ட முதல் 2 ஆய்வு தொடர்பான அறிக்கைகளை தமிழாக்கம் செய்து வருகிறோம். 5-ம் கட்ட பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் அந்த அறிக்கையையும் இதோடு சேர்த்து வெளியிட முடிவு செய்துள்ளோம். 3-ம் கட்ட பணிகள் குறித்த ஆய்வு அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. 4-வது கட்ட பணி குறித்த அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது.

அடுத்ததாக நடைபெற உள்ள 6-வது கட்ட அகழாய்வு என்பது மிகப்பெரிய பணி ஆகும். 110 ஏக்கரில் இந்த பணி நடைபெற உள்ளது. இதற்கு முதலில் ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. அதை தற்போது ரூ.3 கோடியாக முதல்-அமைச்சர் உயர்த்தி இருக்கிறார். தமிழகத்தின் 7 இடங்களில் உள்ள சிற்பக்கலைகள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு முறையில் பன்முகத் தன்மையுடன் இருக்கிறது. இதில் பண்பாடு தொகுப்பு(கல்சர் கிளஸ்டர்) உருவாக்க திட்டமிட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.