கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த: ரூ.12 கோடியில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த: ரூ.12 கோடியில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2019 12:00 AM GMT (Updated: 1 Nov 2019 9:59 PM GMT)

கீழடி அகழாய்வின் போது கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12 கோடி செலவில் சிவகங்கை கொந்தகையில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நவம்பர் 1-ந்தேதி தமிழ்நாடு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, 62 ஆண்டுகளுக்கு பின்பு முதன் முறையாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு தினம் அரசு விழாவாக நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வரவேற்றார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் வரலாறும், தமிழ் மக்களின் பண்பாடும் மிகவும் தொன்மை வாய்ந்தவை. பூமியில் முதல் மனிதன் தோன்றியது தமிழ் பேசும் நிலத்தில் தான் என்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் சொல் ஆராய்ச்சிகளால் விளக்கி உள்ளார்.

நம் வரலாற்றின் தொன்மையை இதுவரை இலக்கிய சான்றுகள் கொண்டு நாம் விளக்கியதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், தேனி மாவட்டம் புள்ளிமான் கோம்பையிலும், பழனி அருகே உள்ள பொருந்தலிலும் நடுக்கற்கள் மற்றும் மண்பாண்ட சான்றுகள் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

தற்போது, சிவகங்கை மாவட்டம், கீழடி ஆய்வுகள் வைகை நதிக்கரை நாகரீகத்தை உலகுக்கு பறைசாற்றுகின்றன. இதன் மூலம் தமிழரின் தமிழி என்ற தமிழ் பிராமி எழுத்துகள், அசோகர் காலத்து பிராமி எழுத்துகளுக்கும் காலத்தால் முந்தியவை என்பதை உறுதி செய்கின்றன. இந்திய துணை கண்டத்தில் முதல் எழுத்தறிவு பெற்ற சமூகம் தமிழ் சமூகம் தான் என்பது நிரூபணமாகி இருக்கிறது.

தமிழ்நாடு தின விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது, தமிழ் நாட்டின் பெருமை பற்றியும், நமது மொழியின் தொன்மை பற்றியும், அனைவரும் நினைவுகூறும் வகையில் அமையும் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த இனிய நாளில், கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா கொந்தகை கிராமத்தில் ஒரு புதிய உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ரூ.12.21 கோடி செலவில் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதன் மூலம் தமிழர்களின் பண்டைய பண்பாடு மற்றும் தொன்மை குறித்து மக்கள் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் மாநிலம் உருவான போது தமிழக எல்லைப்பகுதிகளை தமிழ்நாட்டோடு சேர்ப்பதற்கு நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் தமிழ்மகன் உசேன், சிலம்பு செல்வர் ம.பொ.சி. மகள் மாதவி பாஸ்கரன் உள்ளிட்ட தியாகிகளுக்கும், தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொன்னாடை மற்றும் விருது வழங்கி பாராட்டினார்.

முன்னதாக கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டிருந்த சிற்பம் மற்றும் ஓவிய கண்காட்சியை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை ஏற்பாட்டில் தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையத்தின் இயக்குனர் மதுரை பி.சோமசுந்தரம் தலைமையில் கலைக்குழுவினர் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டம், தப்பாட்டம், தவிலாட்டம், கொம்பு வாத்தியம், தாரை வாத்தியம், நையாண்டி மேளம் போன்ற பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், கவியரங்கம், கருத்தரங்கம், இளையோர் அரங்கம் ஆகியவை நடத்தப்பட்டது. இதில், தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு பேசினர்.

Next Story