திருச்சியில் மீண்டும் துணிகர சம்பவம்: ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து வங்கியில் ரூ.1½ கோடி கொள்ளை - மர்ம நபர் கைவரிசை


திருச்சியில் மீண்டும் துணிகர சம்பவம்: ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து வங்கியில் ரூ.1½ கோடி கொள்ளை - மர்ம நபர் கைவரிசை
x
தினத்தந்தி 2 Nov 2019 5:45 AM IST (Updated: 2 Nov 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பாய்லர் ஆலை வங்கியில் ரூ.1½ கோடி கொள்ளையடிக்கப்பட்டது. குல்லா அணிந்து வந்து கைவரிசை காட்டிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சியில் கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரில் துளையிட்டு 470 பவுன் தங்க நகைகள், ரூ.19 லட்சம் கொள்ளை போனது.

இதேபோல் கடந்த மாதம் 2-ந்தேதி திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள 28½ கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த இரு கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்ட திருவாரூர் முருகன், சுரேஷ், கணேசன் உள்ளிட்ட கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் முழுவதையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது அங்கு மீண்டும் ஒரு துணிகர கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி-தஞ்சை சாலையில் திருவெறும்பூரில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாய்லர் ஆலை நிறுவனம் (பி.எச்.இ.எல்.) உள்ளது. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். பாய்லர் ஆலை வளாகத்திலேயே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கென தனித்தனியாக குடியிருப்புகள் உள்ளன.

இந்த பகுதி பாய்லர் ஆலை போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், பாய்லர் ஆலை தொழிற்சாலைக்கென தனியாக பாதுகாவலர்கள் உள்ளனர். இந்த பாதுகாவலர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். பாய்லர் ஆலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தவிர, வெளி ஆட்கள் யாரும் உரிய அனுமதியின்றி ஆலைக்குள் நுழைய முடியாது. அந்த அளவுக்கு பாதுகாப்பு நிறைந்த பகுதி ஆகும்.

பாய்லர் ஆலையின் பிரதான நுழைவு வாயிலின் முன்பு பாய்லர் ஆலைக்கான நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பாய்லர் ஆலை தொழிலாளர்களுக்கான கூட்டுறவு வங்கியும் செயல்பட்டு வருகிறது. பாய்லர் ஆலை ஊழியர்களுக்கு மாதந்தோறும் 31-ந்தேதி சம்பளம் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் சம்பளம் கூட்டுறவு வங்கியில் இருந்து ஊழியர்களின் சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும். இந்த தொகையை ஊழியர்கள் அங்குள்ள ஏ.டி.எம். எந்திரம் மூலமாகவோ அல்லது வங்கியில் இருந்து காசாளர் மூலம் பணமாகவோ பெற்றுக் கொள்வார்கள்.

இந்த நிலையில் 31-ந்தேதியான நேற்று முன்தினம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக கூட்டுறவு வங்கி கணக்காளர் ரவீந்திரன் திருச்சியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.1½ கோடியை பெட்டியில் எடுத்துக்கொண்டு பாய்லர் ஆலை கூட்டுறவு வங்கிக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மேல் ஊழியர்களின் வங்கி கணக்கில் சம்பளத்தொகை வரவு வைக்கப்பட்டது.

ஆனால் மாலை 5 மணிக்கெல்லாம் வேலை முடிந்து பெரும்பாலான ஊழியர்கள் சென்று விட்டனர். இதனால் ஏராளமான ஊழியர்கள் காசாளரிடம் இருந்து சம்பள பணத்தை பெறவில்லை. இதனால் சில ஊழியர்களுக்கு மட்டும் ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

மீதம் இருந்த ரூ.1 கோடியே 47 லட்சத்தை வங்கியின் லாக்கரில் வைக்க முயன்றனர். ஆனால் லாக்கரின் சாவி சரியாக வேலை செய்யாததால் அதனை திறக்க முடியவில்லை. இதனால் பணத்தை பெட்டியிலேயே வைத்துவிட்டு சென்று விட்டனர்.

நேற்று காலை 9 மணி அளவில் வழக்கம்போல் வங்கியை திறந்து ஊழியர்கள் உள்ளே நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. உடனே பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 கோடியே 47 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள், உடனடியாக அதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு வந்து பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மற்றும் பாய்லர் ஆலை போலீசார் வங்கிக்கு சென்று விசாரித்தனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்கும் அங்கு சென்று விசாரணை நடத்தினார். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது வங்கிக்குள் சென்று மோப்பம் பிடித்துவிட்டு கட்டிடத்தின் வெளியே வந்து சிறிது தூரம் அங்குமிங்கும் ஓடி நின்று விட்டது. கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று ரேகைகளை பதிவு செய்தனர்.

பாய்லர் ஆலை நிர்வாக அலுவலகத்தையொட்டி இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் ‘ஸ்டாண்டு’ உள்ளது. இதில் பாய்லர் ஆலை ஊழியர்கள் மட்டுமின்றி, பாய்லர் ஆலைக்கு பல்வேறு பணிகளுக்காக வரும் வெளிநபர்களும் வாகனங்களை நிறுத்தலாம். இந்த வாகன நிறுத்துமிடம் அருகே உள்ள ஜன்னல் கம்பி உடைந்து கிடந்தது. நேற்று முன்தினம் இரவு ஜன்னல் கம்பியை ‘ஸ்குரு’ டிரைவர் மூலம் மர்ம நபர் கழட்டி உள்ளார். பின்னர் ஜன்னல் கதவை திறந்து உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நேற்று முன்தினம் இரவு 7.58 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் மழைகோட்டும், குல்லாவும் அணிந்தபடி பையுடன் அந்த பகுதியில் நடந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் அவருடைய உருவம் தெளிவாக தெரியவில்லை. அந்த நபர்தான் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதனால் அந்த நபர் யார்? பாதுகாப்பு நிறைந்த பாய்லர் ஆலை பகுதியில் தைரியமாக நுழைந்து கொள்ளையடித்து சென்றது எப்படி? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வங்கி லாக்கரை திறக்க முடியவில்லை என்று பணத்தை வெளியே பெட்டியில் வைத்துச் சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த கொள்ளையில் வங்கியில் வேலை பார்க்கும் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சிலரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

பாதுகாப்பு நிறைந்த பாய்லர் ஆலை வளாகத்தில் நடந்துள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story